மேரி விஜிலா
தூத்துக்குடி: காதல் விவகாரத்தில் வீட்டுக்குள் புகுந்து பெண்ணை கொலை செய்துவிட்டு அவரது 2 மகள்களை கடத்திச் சென்று சிறைவைத்த இளைஞர் கைது செய்யப்பட்டார். இச்சம்பவத்தில் படுகாயமடைந்த தந்தையும், மகனும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே முதலூரைச் சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் (43). இவரது மனைவி மேரி விஜிலா (39). இவர்களுக்கு 15 மற்றும் 14 வயதில் 2 மகள்களும், 12 வயதில் மகனும் உள்ளனர். இவர்களது 15 வயது மகளும், ஆனந்தபுரத்தைச் சேர்ந்த ஞானப்பிரகாஷ் (23) என்பவரும் பழகி வந்துள்ளனர்.
இதை முத்துகிருஷ்ணன் குடும்பத்தினர் கண்டித்ததால் அவர்கள் மீது ஞானப்பிரகாஷுக்கு ஆத்திரம் ஏற்பட்டது. இந்நிலையில், நேற்று அதிகாலை 2 மணி அளவில் முத்துகிருஷ்ணன் வீட்டுக்குள் நுழைந்த ஞானப்பிரகாஷ், அங்கு தூங்கிக் கொண்டிருந்தவர்களை எழுப்பி தகராறில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது, மறைத்து வைத்திருந்த அரிவாளால் முத்துகிருஷ்ணன், அவரது மனைவி மேரி விஜிலா மற்றும் மகனை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில், மேரி விஜிலா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர், முத்துகிருஷ்ணனின் 2 மகள்களையும் மிரட்டி, தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று அடைத்து வைத்துவிட்டு ஞானப்பிரகாஷ் தப்பியோடிவிட்டார்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தட்டார்மடம் போலீஸார், காயமடைந்த தந்தை, மகனை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஞானப்பிரகாஷின் வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 2 சிறுமிகளையும் மீட்டனர். தப்பி ஓடிய ஞானப்பிரகாஷ் போலீஸாரின் தீவிர தேடுதலில் கைது செய்யப்பட்டார்.
விவசாயி கொலை: சாத்தான்குளம் அருகே உள்ள பன்னம்பாறை கீழத் தெருவை சேர்ந்தவர் கொம்பையா (64), விவசாயியான இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த ஆறுமுகம் (42) என்பவருக்கும், நடைபாதை தொடர்பாக 3 ஆண்டுகளுக்கும் மேலாக பிரச்சினை இருந்து வந்தது. நேற்று முன்தினம் இரவில் அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த ஆறுமுகம் அப்பகுதியில் கிடந்த பெரிய கல்லை எடுத்து கொம்பையாவை தாக்கியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே கொம்பையா உயிரிழந்தார். இதுகுறித்து சாத்தான்குளம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, ஆறுமுகத்தை கைது செய்தனர்.
மீனவர் கொலை: தூத்துக்குடி திரேஸ்புரம் முத்தரையர் காலனியைச் சேர்ந்த பழனி (45), செந்தில்வேல் (30) ஆகிய இருவரும் சங்குகுளி தொழில் செய்து வந்தனர். நேற்று காலை திரேஸ்புரம் கடற்கரையில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் செந்தில்வேல் கத்தியால் குத்தியதில் பழனி சம்பவ இடத்திலேயே இறந்தார். போலீஸார் வழக்கு பதிவு செய்து, செந்தில்வேலை கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 3 பேர் கொலை செய்யப்பட்டது, மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு கனிமொழி எம்.பி. கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சமூகவலைதளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், ‘தவெக ஆட்சியில் தூத்துக்குடி மாவட்டமே கொலைக்களமாக மாறிவிட்டது. எத்தனை உயிர்கள் போனாலும் தவெக அரசு நடவடிக்கை எடுக்காது என்ற தைரியத்தில்தான் இதுபோன்ற கொலைக் குற்றங்கள் தொடர்கின்றன. மக்கள் மீது முதல்வர் விஜய் கருணைகாட்டி, நன்கு வேலை பார்க்கத் தெரிந்தவரிடம் காவல்துறையை ஒப்படைக்க வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளார்.