க்ரைம்

போலீஸ் விசாரணைக்குப் பயந்து தலைமறைவான பெண் யூடியூபர்: 5 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர்

எல்.மோகன்

நாகர்கோவில்: பிரபல​மான வேகத்​திலேயே பிரச்​சினை​களி​லும் சிக்கி வரு​கி​றார் பெண் யூடியூபர் மது​மி​தா. தன்​னைப் பற்றி அடுத்​தடுத்து வெளிவ​ரும் மர்ம தகவல்​களால், போலீஸ் விசா​ரணைக்கு பயந்து அவர் வீட்டை பூட்​டி​விட்டு தலை​மறை​வாகி​யுள்​ளார்.

நாகர்​கோ​விலை அடுத்த தம்​மத்​துக்​கோணத்​தைச் சேர்ந்த பெண் யூடியூபர் மது​மிதா (28), சமீபத்​தில் பணம், நகை​களை வாரி​யிறைத்​தும், தனது குழந்​தைக்கு 500 ரூபாய் நோட்​டு​களால் அபிஷேகம் செய்​தும் வீடியோக்​களை பதி​விட்​டது சர்ச்​சை​யானது. இந்த வீடியோக்​களைப் பார்த்த 4 பேர் சேர்ந்து அவரது வீட்​டில் நகை, பணத்தை திருடினர்.

மது​மிதா போலீ​ஸில் அளித்த புகாரில் 118 பவுன் நகை திருடு போன​தாக தெரி​வித்​திருந்த நிலை​யில், கைது செய்​யப்​பட்​ட​வர்​களிடம் இருந்து 98 பவுன் மட்​டும் மீட்​கப்​பட்​டது. மது​மிதா தனது யூடியூப் மூலம் 6,000-க்​கும் அதி​க​மான வீடியோக்​களை வெளி​யிட்​டுள்​ளார். வீட்​டில் நகை திருட்டு நடந்த பின்​னரும், கடந்த ஒரு வாரத்​தில் ஓட்​டலில் தனது குழந்​தை​யுடன் நீச்​சல் குளத்​தில் இருப்​பது போல​வும், கேக் வெட்​டு​வது போல​வும் பல வீடியோக்​களை பதி​விட்​டார்.

இதனிடையே, மது​மிதா பணமழை பொழி​யும் வீடியோவை ஆய்வு செய்த வரு​மான வரித்​துறை அதி​காரி​கள், அவரது வீட்​டில் விசா​ரணை மேற்​கொண்​டனர். அத்​துடன், நெல்லை கே.டி.சி. நகரைச் சேர்ந்த கட்​டிட ஒப்​பந்​த​தா​ரர் பேச்​சி​முத்து (89), தனது 5 பவுன் நகையை பறித்​துச் சென்​ற​தாக அளித்த புகாரின்​பேரில், மது​மிதா மீது ராஜாக்​கமங்​கலம் போலீ​ஸார் வழக்கு பதிவு செய்​துள்​ளனர். இப்​படி மது​மிதா அடுத்​தடுத்து சர்ச்​சை​யில் சிக்​கி​னார்.

நகை பறிப்பு வழக்​கில் போலீஸ் விசா​ரணைக்கு பயந்து நேற்று முன்​தினம் வீட்டை பூட்​டி​விட்டு கணவர் வினோத்​கு​மார் மற்​றும் குழந்​தை​யுடன் மது​மிதா தலை​மறை​வாகி​யுள்​ளார்.

இத்​தனை பிரச்​சினை​களுக்கு பிறகும் சமூக ஊடகங்​களில் மது​மிதா வெளி​யிட்ட மற்​றும் அவர் தொடர்​புடைய வீடியோக்​கள் பல கோடி பார்​வை​களைக் கடந்து வைரலான​தால், அவரைப் பின்தொடர்​பவர்​களின் எண்​ணிக்​கை​யும் மிக வேக​மாக அதி​கரித்​து, 5 லட்​சத்தை நெருங்​கி​யுள்​ளது. மது​மி​தா​வின் தனிப்​பட்ட வாழ்க்​கையை அறிந்​து​கொள்ள, அவரை யூடியூபில் பின்​தொடர்​வோர் அதிக ஆர்​வம் காட்டி வரு​கின்​றனர்.

SCROLL FOR NEXT