சென்னை: புழல் அடுத்த சூரப்பட்டு பகுதியைச் சேர்ந்த 25 வயது இளம் பெண், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மகேஷ் கண்ணா என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
தம்பதியிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த 2 மாதங்களாக அந்தப் பெண் தனது கணவரைப் பிரிந்து தாய் வீட்டில் வசித்து வருகிறார். தொடர்ந்து கணவர் தொல்லை கொடுத்து வந்ததால், அந்தப் பெண் பட்டாபிராம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதன் அடிப்படையில், மகேஷ் கண்ணா மீது பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், நேற்று அந்த இளம்பெண்ணை செல்போனில் தொடர்புகொண்ட நபர் ஒருவர், தான் மகேஷ் கண்ணாவின் வழக்கறிஞர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார்.
அவர்களின் குடும்பப் பிரச்சினையை தீர்த்து வைப்பதாகக் கூறி, பெரம்பூரில் உள்ள ஓர் ஓட்டலுக்கு வருமாறு அந்த பெண்ணை அழைத்துள்ளார். அதை நம்பி ஓட்டலுக்குச் சென்ற பெண்ணிடம், அந்த நபர் ஆபாசமாகப் பேசி, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
அந்த பெண் கூச்சலிடவே அங்கிருந்த பொதுமக்கள், அந்த நபரைப் பிடித்து செம்பியம் போலீஸில் ஒப்படைத்தனர். பிடிபட்ட நபரிடம் நடத்திய விசாரணையில் அவர் வழக்கறிஞர் கிடையாது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதியின் உதவியாளராக (டபேதார்) பணியாற்றி ஓய்வுபெற்ற ஞானப்பிரகாசம் (68) என்பது தெரியவந்தது. செம்பியம் போலீஸார் ஞானப்பிரகாசம் மீது பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இதில் கணவர் மகேஷ் கண்ணாவுக்கு உள்ள தொடர்பு குறித்தும் விசாரித்து வருகின்றனர்.