மாற்றுத் திறனாளி பெண்ணுக்கு நீதி கேட்டு நேற்று நடந்த மறியல்.
புதுக்கோட்டை: கறம்பக்குடி அருகே மாற்றுத் திறனாளி பெண்ணை காரில் கடத்திச்சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில் தலைமறைவாக இருந்தவரை போலீஸார் நேற்று கைது செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பகுதியைச் சேர்ந்த 35 வயதான வாய் பேச முடியாத மற்றும் காது கேளாத மாற்றுத் திறனாளி பெண், ஒரு அரிசி ஆலையில் தினக்கூலியாக வேலை செய்து வருகிறார். இவர் 2 நாட்களுக்கு முன்பு பணி முடிந்து வீட்டுக்குச் செல்ல பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தார்.
அப்போது, அவ்வழியாக காரில் சென்ற கறம்பக்குடி மணக்கொல்லையைச் சேர்ந்த ஏ.சேகர் (56), மாரிமுத்து (55) ஆகியோர் அவரை காரில் வீட்டுக்குக் கொண்டு சென்று விடுவதாகக் கூறியுள்ளனர்.
அந்தப்பெண் மறுத்த நிலையில், அவரை கட்டாயப்படுத்தி காரில் ஏற்றி கண்மாய் பகுதிக்கு கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளனர்.போராடிய அந்தப் பெண்ணை தாக்கியுள்ளனர். பின்னர், காரில் சிறிது தொலைவு அழைத்துச் சென்று இறக்கிவிட்டு தப்பினர். அப்பெண் கூச்சலிட்டதை கேட்டு அக்கம் பக்கத்தினர் சென்று விசாரித்து, மழையூர் போலீஸாருக்கு தகவல் தந்தனர்.
இதையடுத்து, அவர் புதுக்கோட்டை ராணியார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக, ஆலங்குடி அனைத்து மகளிர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து மாரிமுத்துவை கைது செய்தனர். நீதிகேட்டு மழையூரில் மக்கள் நேற்று மறியலில் ஈடுபட்டனர். இந்நிலையில் திண்டுக்கல்லில் வைத்து சேகரை போலீஸார் கைது செய்தனர்.
இழப்பீடு வழங்க வேண்டும்
இதனிடையே இந்தச் சம்பவத்துக்கு தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
திமுக துணை பொதுச்செயலாளர்கனிமொழி: மாற்றுத் திறனாளி பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட செய்தி மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. மகளிர் பாதுகாப்பை உறுதி செய்வோம் என்று வாக்குறுதியளித்து ஆட்சிக்கு வந்திருக்கும் தவெக அரசு, தொடரும் இதுபோன்ற சம்பவங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாமக தலைவர் அன்புமணி: இது மன்னிக்க முடியாத குற்றமாகும். திமுக ஆட்சி அகற்றப்பட்ட பிறகும் அத்தகைய குற்றங்கள் தொடர்வது கவலையளிக்கிறது. இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன்: இச்சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்த குற்றச்செயலில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட்டு, தண்டிக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.