ஷர்மிளா
புதுச்சேரி: புதுச்சேரியில் இளம்பெண்ணை எரித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி உப்பளம் நேதாஜி நகரைச் சேர்ந்தவர் ஷர்மிளா (28). தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். அப்போது அங்கு பணியாற்றிய இந்திரா நகரைச் சேர்ந்த ஜோசப் என்பவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. ஜோசப் ஏற்கெனவே திருமணமாகி, மனைவியை பிரிந்து வாழ்வதும், வேறொரு பெண்ணுடன் நட்பில் இருப்பதும் சில நாட்களில் ஷர்மிளாவுக்கு தெரியவந்தது. இதனால் ஜோசப் உடனான நட்பை அவர் துண்டித்தார்.
இதன்பிறகு ஜோசப், அடிக்கடி ஷர்மிளாவைச் சந்தித்து வாக்குவாதம் செய்து வந்துள்ளார். இதனால் பள்ளியில் பிரச்சினை ஏற்பட, ஷர்மிளா பள்ளியிலிருந்து விலகி, அண்ணா சாலையில் உள்ள பிரபலமான துணிக்கடையில் வேலைக்குச் சேர்ந்தார். அங்கும் அடிக்கடி சென்று ஜோசப் தகராறு செய்து வந்ததாகத் தெரிகிறது. இதுகுறித்து ஒதியஞ்சாலை காவல் நிலையத்தில் ஷர்மிளா புகார் அளித்த நிலையில், போலீஸார் ஜோசப்பை அழைத்து எச்சரித்து அனுப்பினர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ஷர்மிளா வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு ஒதியஞ்சாலை காவல் நிலையம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்து ஜோசப் வாக்குவாதம் செய்துள்ளார். ஷர்மிளா அவரை திட்டிவிட்டு, அங்கிருந்து கிளம்ப முயற்சித்தார். இதில் ஆத்திரமடைந்த ஜோசப், பாட்டிலில் மறைத்து எடுத்து வந்த பெட்ரோலை ஷர்மிளா மீது ஊற்றி தீ வைத்தார். இதனால் உடல் முழுவதும் தீ பற்றி எரிந்தது.
இதில் அலறி துடித்த ஷர்மிளாவை அங்கிருந்தவர்கள் ஓடிவந்து தீயை அணைத்து மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. கையில் காயம் அடைந்த ஜோசப், ஒதியஞ்சாலை காவல் நிலையத்தில் சரணடைந்தார். போலீஸார் அவரை ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். சம்பவ இடத்தை சீனியர் எஸ்பி கலைவாணன், எஸ்பி ஸ்ருதி, இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
மேலும் புதுச்சேரி நீதிபதி ஷர்மிளாவிடம் நடந்த சம்பவம் குறித்து வாக்குமூலம் பெற்றார். இந்நிலையில் நேற்று காலை சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதையடுத்து ஒதியஞ்சாலை போலீஸார் ஜோசப் மீது கொலை வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.