நாகர்கோவில்: கன்னியாகுமரி அருகே கொட்டாரத்தை அடுத்த பெரியவிளையைச் சேர்ந்தவர் ஆன்றணிராஜ் (27). பொக்லையன் இயந்திரம் வைத்து தொழில் செய்து வந்தார். அதே ஊரைச் சேர்ந்தவர் ஞானசெல்வம் என்ற அழகேசன். ஓய்வுபெற்ற ராணுவ வீரரான இவர், கொட்டாரத்தில் ஆட்டோ ஒட்டி வருகிறார். அழகேசனின் மகள் ஏஞ்சல் (23), கல்லூரி படிப்பை முடித்துவிட்டு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவரை, ஆன்றனிராஜ் ஒரு தலையாக காதலித்துள்ளார். ஆனால், ஏஞ்சல் இதை ஏற்கவில்லை.
இது தொடர்பாக, ஆன்றணிராஜ் மீது கன்னியாகுமரி போலீஸில் புகார் கொடுக்கப்பட்டது. போலீஸார் அவரை காவல் நிலையத்துக்கு வரவழைத்து எச்சரித்து அனுப்பினர். ஆனாலும், ஏஞ்சலுக்கு தொடர்ந்து ஆன்றணிராஜ் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனால் மனவேதனை அடைந்த ஏஞ்சல், நேற்று முன்தினம் மாலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இந்த தகவலை அறிந்த ஆன்றணிராஜ், நேற்று முன்தினம் இரவு பெரியவிளைக்கு வந்துள்ளார். அவரைப் பார்த்ததும் ஏஞ்சலின் உறவினர்கள் ஆத்திரம் அடைந்தனர். அவர்கள் அப்பகுதியில் கிடந்த கல் மற்றும் கட்டையால் ஆன்றனிராஜை தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த அவர், கீழே விழுந்து உயிரிழந்தார்.
இதுதொடர்பாக மாவட்ட எஸ்.பி. அன்சுல் நாகர், கன்னியாகுமரி டிஎஸ்பி பிரகாஷ் ஆகியோர் விசாரணை நடத்தினர். ஏஞ்சல், ஆன்றனிராஜ் ஆகியோரின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆன்றனி ராஜ் கொலை தொடர்பாக, பெரியவிளையைச் சேர்ந்த பெவின் (26), பெனிஸ் (25), வினிஸ் (22), ரவிசெல்வன் (56), ஏசுநேச செல்வன் (58) ஆகிய 5 பேரை போலீஸார் நேற்று கைது செய்தனர்.