சென்னை: சென்னை அண்ணாநகரில் மழைநீர் வடிகால் அமைப்பதற்காகத் தோண்டப்பட்ட பள்ளத்தில் தவறி விழுந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அண்ணாநகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அண்ணாநகர் மேற்கு விரிவாக்கம் பாடி புதுநகர் 10-வது தெருவைச் சேர்ந்தவர் கலாவதி (59). இவர் அண்ணாநகர் பகுதியில் உள்ள பிரபல இனிப்பு கடையில் ஊழியராக வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு வீடு அருகேயுள்ள தேவாலயத்துக்கு சென்றார்.
அவர் அண்ணாநகர் டவர் மெட்ரோ ரயில் நிலையம் அருகே உள்ள புளூ ஸ்டார் சந்திப்பு பகுதியில் நடந்து சென்றபோது, மழைநீர் வடிகால் அமைப்பதற்காகத் தோண்டப்பட்டு மூடப்படாமல் இருந்த பள்ளத்தில் தவறி விழுந்தார்.
அன்று இரவு பெய்த பலத்த மழையால் அந்த பள்ளத்தில் சுமார் ஒன்றரை அடி உயரத்துக்கு தண்ணீர் தேங்கி நின்றது. தண்ணீரிலும், சகதியிலும் சிக்கிய கலாவதி பலமுறை வெளியே வர முயன்றும் முடியவில்லை.
இதனை பார்த்த பொதுமக்கள், கலாவதியை காப்பாற்ற முயன்றனர். பள்ளத்தில் தேங்கியிருந்த தண்ணீரில் மின்கசிவு இருக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டதால், யாரும் தண்ணீருக்குள் இறங்க முடியவில்லை. போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மின்வாரிய ஊழியர்களின் உதவியுடன் பள்ளத்தில் சிக்கியிருந்த கலாவதியை மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.
அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றபோது, 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் பரிசோதனை செய்தனர். அப்போது கலாவதி ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்தது.
இதையடுத்து அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து அண்ணாநகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், கலாவதி விழுந்த பள்ளத்தில் தேங்கியிருந்த தண்ணீரில் மின்கசிவு ஏற்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.