கவிப்பிரியா, முத்துக்குமரன்

 
க்ரைம்

தங்கைக்கு பாலியல் தொல்லை: கணவனுடன் சேர்ந்து பக்கத்து வீட்டுக்காரரை கொன்ற பெண் கைது @ கடலூர்

செய்திப்பிரிவு

கடலூர்: கடலூர் பாதிரிக்குப்பம், சுந்தரமூர்த்தி நகரைச் சேர்ந்தவர் பிரசாத் (41). திருமணம் ஆகாதவர். இவர், நேற்று முன்தினம் மாலை அவரது வீட்டில் கழுத்தில் வெட்டுப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார்.

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீஸார் உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், பிரசாத் அவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்த அபிதா (22) என்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

அதை அபிதா, அவரது அக்கா கவிப்ரியா (24) என்பவரிடம் கூறியுள்ளார். கவிப்பிரியா மற்றும் அவரது கணவர் முத்துக்குமரன் (30) ஆகியோர் பிரசாத்தை கண்டித்துள்ளனர்.

இதற்கிடையே நேற்று முன்தினம் மாலை மதுபோதையில் இருந்த பிரசாத், இந்த பிரச்சினை குறித்து கவிப்பிரியாவிடம் பேசி தகராறில் ஈடுபட்டுள்ளார்.

இதைத் தொடர்ந்து பிரசாத் கொலை செய்யப்பட்டார். நேற்று முன்தினம் இரவு கவிப்ரியா திருப்பாதிரிப்புலியூர் காவல்நிலையத்தில் சரணடைந்து, தானே இந்தக் கொலையை செய்ததாக தெரிவித்தார்.

போலீஸாரிடம் கொடுத்த வாக்கு மூலத்தில், “எனது தங்கைக்கு பிரசாத் அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்தார். இது குறித்து எனது தங்கை என்னிடம் தெரிவித்தார். இருமுறை பிரசாத்தை அழைத்து எச்சரித்தோம்.

இதற்கிடையே நேற்று முன்தினம் எனது தங்கைக்கு மீண்டும் பாலியல் தொல்லை கொடுத்தார். இது குறித்து எனது தங்கை மீண்டும் என்னிடம் தெரிவித்தார்.

இதையடுத்து நானும் எனது கணவர் முத்துக்குமரனும் பிரசாத் வீட்டுக்குச் சென்று, அவரை கண்டித்தோம். கண்டிக்கச் சென்ற எங்களையும் பிரசாத் கடுமையாக பேசி கொலை மிரட்டல் விடுத்தார்.

இதனால் ஆத்திரமடைந்த நானும், எனது கணவரும் சேர்ந்து பிரசாத்தை தாக்கி, கழுத்தை அறுத்து கொலை செய்தோம்” என்று தெரிவித்தார். இதையடுத்து போலீஸார் அவரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக இருந்த முத்துக்குமரனையும் கைது செய்தனர்.

SCROLL FOR NEXT