சென்னை: பிஹாரைச் சேர்ந்த இளம்பெண் உட்பட 3 பேர் கொலை வழக்கில், இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை, தலையில் இரும்பு கம்பியால் அடித்ததால் ஏற்பட்ட காயமே உயிரிழப்புக்கு காரணம் என பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிய வந்துள்ளது.
பிஹார் மாநிலம் ஷேக்பூரா மாவட்டத்தைச் சேர்ந்தவர் கவுரவ் குமார்(24). இவர் தனது மனைவி முனிதா குமாரி (20) மற்றும் 2 வயது மகன் பிர்மானி குமார் ஆகியோருடன் வேலை தேடி சென்னை வந்தார். இந்நிலையில், கடந்த 26ம் தேதி, அடையாறு இந்திரா நகர் பகுதியில் சாக்கு மூட்டையில் ரத்தக் காயங்களுடன் கவுரவ் குமாரின் உடல் கண்டெடுக்கப்பட்டது.
இந்தக் கொலை தொடர்பாக அடையாறு போலீஸார் தீவிர விசாரணை நடத்தி, பிஹாரைச் சேர்ந்த சிக்கந்தர் (எ) சத்யேந்தர்(30), லலித் யாதவ்(40) மற்றும் விகாஷ் குமார்(24) ஆகிய 3 பேரைக் கைது செய்தனர். விசாரணையில், அவர்கள் கவுரவ் குமாரை மட்டுமின்றி, அவரது மனைவி மற்றும் 2 வயது குழந்தையையும் கொலை செய்து வெவ்வேறு இடங்களில் வீசியது தெரியவந்தது.
குழந்தையின் உடல் மத்திய கைலாஷ் ரயில்வே பாலம் அருகேயுள்ள பக்கிங்ஹாம் கால்வாயில் கண்டெடுக்கப்பட்டது. மனைவி முனிதா குமாரியின் உடல் பெருங்குடி குப்பை மேட்டில் இருந்து 3 நாட்களுக்குப் பிறகு மீட்கப்பட்டது. கைது செய்யப்பட்ட மூவரும் முனிதா குமாரியைப் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளனர்.
அதைத் தடுக்க வந்த கணவர் கவுரவ் குமார் மற்றும் அழுது கொண்டிருந்த 2 வயது குழந்தை ஆகியோரால் தங்களது குற்றம் வெளியில் தெரிந்துவிடும் என்ற பயத்திலும் மூவரையும் அடித்துக் கொலை செய்ததாகக் கைதானவர்கள் வாக்குமூலம் அளித்தனர். முனிதா குமாரியின் உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் மருத்துவக் குழுவினரால் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது.
அதில், முனிதா குமாரி பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை, பாலியல் துன்புறுத்தலுக்கான தடயங்கள் ஏதுமில்லை, தலையில் இரும்பு கம்பியால் பலமாக தாக்கப்பட்டதால் ஏற்பட்ட காயமே அவரது உயிரிழப்புக்கு முதன்மைக் காரணம் என்பது தெரியவந்துள்ளது.