சென்னை: வியாசர்பாடி ராஜீவ்காந்தி நகரைச் சேர்ந்தவர் கிளின்டன் (25). வேன் ஓட்டுநராக வேலை செய்து வந்தார். மது போதைக்கு அடிமையாகி போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் கிளின்டன், சென்னை பெரம்பூரில் உள்ள ரமணா நகரில் வசிக்கும் நண்பர் பிரசாந்த் வீட்டுக்குச் சென்றுள்ளார்.
அங்கு பிரசாந்த், நண்பருக்கு குடிக்க குளிர்பானம் கொடுத்துள்ளார். அதை குடித்த கிளின்டன் சிறிது நேரத்திலேயே மயங்கி விழுந்தார்.
இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பிரசாந்த், நண்பரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.
அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் கிளின்டன் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து செம்பியம் போலீஸார் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கிளின்டன் உயிரிழப்புக்கு காலாவதியான குளிர்பானம் காரணமா அல்லது இறப்புக்கு வேறு காரணம் உள்ளதா என போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
இதற்கிடையே,கிளின்டன் மரணத்தில் மர்மம் இருப்பதாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதுகுறித்து, போலீஸார் கூறுகையில், பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே இறப்புக்கான உண்மையான காரணம் தெரியவரும் என்றனர்.