மசூத் அலி
கோவை: சமூக வலைதளங்கள், வாட்ஸ்அப் குழுக்கள் மூலம் இளைஞர்களை ஒருங்கிணைத்து, அல்கொய்தா இயக்கத்துக்கு ஆதரவாக, நாட்டுக்கு எதிரான நடவடிக்கைகளில் சிலர் ஈடுபடுவதாக உத்தரப்பிரதேச மாநில தீவிரவாததடுப்புப் பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து போலீஸார் தீவிரமாக விசாரித்தனர்.
அதைத்தொடர்ந்து, உத்தரப்பிரதேச மாநிலம் ஆசம் நகரைச் சேர்ந்த முகமது நபீல் என்பவரை சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின் (உபா) கீழ் வழக்குப்பதிந்து கடந்த 12-ம் தேதி கைது செய்தனர். அவரிடம் விசாரித்ததில் கோவையில் வசிக்கும் மசூத் அலி(21) என்பவர் அவருடன் தொடர்பில் இருப்பதும், ஆன்லைன் தொடர்புகளை மேற்கொள்ள பிரத்யேக செயலிகள் வடிவமைத்து கொடுத்திருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து, உதவி ஆய்வாளர் அரவிந்த்குமார் வெர்மா தலைமையில் உத்தரப்பிரதேச தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸார் 3 பேர் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் கோவைக்கு வந்தனர். கோவை மண்டல தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸாருடன் இணைந்து மசூத் அலி குறித்து விசாரித்தனர்.
அதில், அவிநாசி சாலை ஹோப் காலேஜ் அருகே உள்ள ஒரு வீ்ட்டில் மசூத் அலி தங்கியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, கோவை தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸார், மசூத் அலியை நேற்று முன்தினம் பிடித்து உத்தரப்பிரதேச மாநிலதீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
அவரைக் கைது செய்த போலீஸார், கோவையில் இருந்து விமானம் மூலம் உத்தரப்பிரதேசம் அழைத்துச் சென்றனர். மசூத் அலி, உத்தரப்பிரதேசத்தை சேர்ந்தவர் என்றும், சமீபத்தில் கோவைக்கு வந்து தங்கியிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.