லக்னோ: உ.பி.யில் போதைப் பொருள் வைத்திருந்த ஒருவருக்கு 18 ஆண்டு கால விசாரணைக்குப் பிறகு ஜான்சி நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.1 லட்சம் அபராதம் விதித்துள்ளது.
இது குறித்து ஜான்சி மாவட்ட உதவி அரசு வழக்கறிஞர் தீபக் திவாரி கூறுகையில், "உத்தர பிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டம் கல்யாண் பூரை சேர்ந்தவர் சஞ்சய் சிங். இவர் தற்போது மகாவீரன் பகுதியில் வசித்து வருகிறார். இவர் கடந்த 2008ம் ஆண்டு ஏப்ரல் 2ம் தேதி பிரேம்நகர் போலீஸார் நடத்திய சோதனையில் கைது செய்யப்பட்டார். சஞ்சய் சிங்கிடம் இருந்து 300 கிராம் போதைப் பொருளை கைது செய்த போலீஸார் அவர் மீது வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்" என்று தெரிவித்தார்.
சஞ்சய் சிங் மீது சங்கிலி பறிப்பு, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் பல்வேறு காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் போதைப் பொருள் வழக்கில் ஜான்சி கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி சரத் சவுத்ரி புதன்கிழமை அளித்த தீர்ப்பில், சஞ்சய் சிங் குற்றவாளி என உறுதி செய்தார். அவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.