க்ரைம்

திருமணம் செய்வதாக கூறி தைவான் பெண்ணை ஏமாற்றிய உடுமலை இளைஞர் கைது

செய்திப்பிரிவு

உடுமலை: திருமணம் செய்து கொள்வதாக கூறி, தைவான் நாட்டைச் சேர்ந்த பெண்ணை ஏமாற்றிய வழக்கில் உடுமலையைச் சேர்ந்த இளைஞரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த போடிபட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஜெகதீஷ் (33). இவர் முனைவர் பட்டப் படிப்பிற்காக கடந்த 2023-ம் ஆண்டு தைவான் நாட்டிற்கு சென்றார்.

அங்கு டேட்டிங் செயலி மூலம் தைச்சுங் நகரைச் சேர்ந்த ஜோயிங்யிங் (35) என்ற பெண்ணுடன் ஜெகதீஷிற்கு பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் அது காதலாக மாறியுள்ளது.

படிப்பை முடித்தவுடன் திருமணம் செய்து கொள்வதாக ஜெகதீஷ் உறுதியளித்ததை நம்பிய அப்பெண், அவரது கல்விச் செலவு, தங்குமிடம் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கு நிதியுதவி செய்ததாகக் கூறப்படுகிறது.

மேலும் இருவரும் ஒரே வீட்டில் ஒன்றாக வசித்து வந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் ஜெகதீஷ் இந்தியா திரும்பியுள்ளார். சொந்த ஊர் வந்தடைந்ததும் அப்பெண்ணுடனான தொடர்பை முழுமையாக துண்டித்துள்ளார்.

கடந்த 5 மாதங்களாக தொடர்புகொள்ள முயன்றும் முடியாததால், ஏமாற்றமடைந்த தைவான் பெண், உடுமலையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவரின் உதவியுடன் உடுமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில், போலீஸார் ஜெகதீஷ் மீது வழக்குப்பதிந்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

SCROLL FOR NEXT