சென்னை: சென்னையைச் சேர்ந்த 33 வயது பெண் ஒருவர், அரும்பாக்கத்தில் உள்ள தனியார் ரெஸ்ட்ரோபாரில் (உணவகம் மற்றும் மதுபானக் கூடம் ஆகிய இரண்டும் இணைந்த இடம்) கடந்த ஓராண்டாக பில்லிங் கேஷியராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், கடந்த 9-ம் தேதி அந்த பெண் தனது இருசக்கர வாகனத்தை தரைதளத்தில் நிறுத்துவதற்காக சென்றுள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர், அந்த பெண்ணை பின்தொடர்ந்து சென்றுள்ளனர்.
பின்னர் அவர்கள் அந்த பெண்ணிடம் ஆபாசமாக பேசியதோடு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், இதுகுறித்து அரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீஸார் சம்பவம் நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், பெண்ணிடம் அத்துமீறி நடந்துகொண்டது சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த பிரபுகுமார் (49), பாலாஜி (30) என்பது தெரிந்தது.
இதையடுத்து, இருவரையும் போலீஸார் கைது செய்தனர். விசாரணையில், பிரபுகுமார் தவெகவில் அண்ணாநகர் மாவட்ட செயற்குழு உறுப்பினராகவும், பாலாஜி அக்கட்சியின் மாவட்ட இளைஞரணி நிர்வாகியாகவும் இருப்பது தெரியவந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.