திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் தோரணம்பதி அடுத்த வெங்கடேஸ்வரா நகர் பகுதியில் காலி வீட்டு மனைகள் விற்பனைக்காக உள்ளன. இதை பார்ப்பதற்காக நேற்று பிற்பகல் 2 மணிக்கு ஒரு ஆணும் பெண்ணும் காரில் வந்தனர். அப்போது அவர்களை பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள், காரில் இருந்த இருவரையும் அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பிவிட்டனர்.
இதில், ரத்த வெள்ளத்தில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து தகவலறிந்ததும் திருப்பத்தூர் எஸ்.பி. அக்சய் அனில் வாகரே, டிஎஸ்பி முரளி மற்றும் போலீஸார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
முதல்கட்ட விசாரணையில், கொலையான ஆண் திருவண்ணாமலை மாவட்டம் பாச்சல் கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை மகன் ரஞ்சித்குமார் (30) என்பதும், பெண் திருப்பத்தூர் மாவட்டம் ப.முத்தம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சிரஞ்சீவி என்பவரின் மனைவி மாலினி (30) என்பதும் தெரியவந்தது. இவர்கள் எதற்காக கொலை செய்யப்பட்டனர், கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலையாளிகளைப் பிடிக்க திருப்பத்தூர் டிஎஸ்பி முரளி மற்றும் ஆய்வாளர் ஜான் பிரிட்டோ தலைமையில் 2 தனிப்படைகளை அமைத்து எஸ்.பி. அக்சய் அனில் வாகரே உத்தரவிட்டுள்ளார்.