க்ரைம்

பெரம்பலூரில் கோயில் திருவிழாவின்போது தேரில் மின்சாரம் தாக்கி 2 பேர் உயிரிழப்பு

எஸ்.ஸ்டாலின்

பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே உயர் மின்னழுத்த கம்பி, கோயில் தேரில் உரசியதில் மின்சாரம் பாய்ந்து இருவர் உயிரிழந்தனர்.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள நன்னை கிராமத்தில் இருந்து பரவாய் பகுதிக்குச் செல்லும் சாலையில் அய்யனார் கோயில் உள்ளது. இந்த கோயில் ஒரு சமூகத்தினருக்கு சொந்தமான குலதெய்வ கோயில் ஆகும். ஆடி கடைசி வெள்ளியை முன்னிட்டு இங்கு திருவிழா நடைபெற இருந்தது. இவ்விழாவையொட்டி சகடை தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதற்காக நேற்று முனதினம் இரவு 20 அடி உயரம் உள்ள சகடை தேரை அலங்காரம் செய்து சாமியை ஊர்வலமாக கொண்டு செல்வதற்கான ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த சகடை தேரை அலங்காரம் செய்வதற்கான பணிகளில் நன்னை கிராத்தைச் சேர்ந்த பெரியசாமி மகன் அண்ணாதுரை (42), கோவிந்தசாமி மகன் பரமசிவம் (42) ஆகியோர் ஈடுபட்டிருந்தனர். அலங்கார பணி செய்ய இருவரும் தேரை கோயிலை விட்டு வெளியே எடுத்து ரோட்டில் இழுத்து வந்தனர்.

கோயிலில் இருந்து ஏரிக்கரை மேட்டிற்கு இழுத்துச் செல்ல முயன்றபோது, எதிர்பாரா விதமாக மேலே சென்ற உயர் மின்னழுத்த மின்சார கம்பியில், தேரின் உச்சியில் இருந்த கூம்புப் பகுதி உரசியது. இதில் தேர் முழுவதும் மின்சாரம் பாய்ந்தது. இதில், தேருக்கு அலங்காரம் செய்து கொண்டிருந்த அண்ணாதுரை மற்றும் பரமசிவம் ஆகியோர் மீது மின்சாரம் பாய்ந்து இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர்.

இதனிடையே, விபத்து குறித்து பொதுமக்கள், கோயில் நிர்வாகிகள் மற்றும் குன்னம் போலீஸாருக்கு தகவல் அளித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த குன்னம் காவல் ஆய்வாளர் கண்ணன் தலைமையிலான போலீஸார் உயிரிழந்த இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஏற்கெனவே இப்பகுதியில் உயர் மின்னழுத்த கம்பி தாழ்வாக சென்று கொண்டிருந்தது. ஏற்கெனவே அப்பகுதி மக்கள் சார்பில் இது குறித்து மின்வாரிய அதிகாரிகளுக்கு கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. ஆனால் மின்வாரிய அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

உயர் மின்னழுத்த கம்பியில் இருந்து மின்சாரம் தாக்கியதில், இருவர் பரிதாகமாக உயிரிழந்ததாக கிராம மக்கள் வேதனை அடைந்துள்ளனர். உயிரிழந்த 2 பேரின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும். இனி இதுபோன்ற விபத்துகள் ஏற்படாதவாறு மின்வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோயில் திருவிழாவின் போது மின்சாரம் பாய்ந்து இருவர் உயிரிழந்ததால் நன்னை கிராமம் சோகத்தில் மூழ்கியுள்ளது.

SCROLL FOR NEXT