சென்னை: ஆயிரம் விளக்கு பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் ஞானகுமார் செங்கல், மணல், ஜல்லி விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வந்தார். அவருடன் சேர்ந்து மனோகர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவர்களிடம் மணி (60) என்பவர் வாகன ஓட்டுநராக பணியாற்றி வந்துள்ளார்.
சம்பள பாக்கி இருந்ததால் அந்த தொகையைக் கேட்டு கடந்த 2014 ஏப்ரல் மாதம் சந்தோஷின் அலுவலகத்துக்கு சென்று முறையிட்ட ஓட்டுநர் மணியை, சந்தோஷ் ஞானகுமாரும், மனோகரும் சேர்ந்து தங்ககாப்பு மற்றும் கார் சாவியால் தாக்கியும், சுவற்றில் மோதியும் கொலை செய்தனர்.
இதையடுத்து, அவர்கள் இருவரையும் ஆயிரம் விளக்கு போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை, சென்னை 4-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி ஆர்.கே.பி.தமிழரசி முன்பாக நடந்தது.
அப்போது, போலீஸார் தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் டி.ரவிக்குமார் ஆஜராகி வாதிட்டார். இருவர் மீதான குற்றச்சாட்டும் சந்தேகத்துக்கிடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் கூறி இருவருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூ. 50 ஆயிரம் அபராதம் விதித்தும் நீதிபதி தீர்ப்பளித்தார்.