விக்கி, சந்துரு
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே உள்ள படுநெல்லி கிராமத்தில் ஆடித்திருவிழா நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
முதல் நாள் விழாவை ஒட்டி பொங்கல் வைத்து வழிபாடு நடத்தப்பட்டு, இரவு சுவாமி வீதியுலா புறப்படத் தயாரானது. அப்போது அதே பகுதியைச் சேர்ந்த போதையில் இருந்த சில இளைஞர்கள் ஒலிபெருக்கியில் கானா பாடல்களை ஒலிபரப்பக்கோரி தகராறில் ஈடுபட்டனர்.
இதற்கு அங்கிருந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து அந்த கும்பல் அங்கிருந்து கலைந்து சென்றது.
அதே பகுதியைச் சேர்ந்த சந்துரு (எ) சந்திரசேகர் (27), விக்கி (எ) நீலகண்டன் (28) ஆகிய இருவருக்கும் போதையிலிருந்த பகவதி, கலைச்செல்வன், புஷ்பராஜ் ஆகியோருக்கும் ஏற்கெனவே முன்விரோதம் இருந்துள்ளது.
இதன் விளைவாக போதை கும்பலைச் சேர்ந்த 3 பேரும் சேர்ந்து சந்துரு, விக்கி ஆகிய இருவரையும் அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டுத் தப்பியோடினர். இதில் பலத்த காயமடைந்த 2 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தகவலறிந்த பொன்னேரிக்கரை போலீஸார் விரைந்து வந்து உடல்களை மீட்க முயன்றபோது, உயிரிழந்தவர்களின் உறவினர்கள் தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போலீஸார் உரிய பாதுகாப்பு வழங்காததே இந்தப் பிரச்சினைக்குக் காரணம் எனக் குற்றஞ்சாட்டினர்.
சுமார் ஒன்றரை மணி நேரப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு உடல்களை மீட்ட போலீஸார், செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தலைமறைவான குற்றவாளிகளைப் பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
அசம்பாவிதங்களைத் தவிர்க்க படுநெல்லி கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.