க்ரைம்

சிவகாசி அருகே வீட்டின் இரும்பு கேட் பெயர்ந்து விழுந்து இரு சிறுமிகள் உயிரிழப்பு

அ.கோபால கிருஷ்ணன்

சிவகாசி: சிவகாசி அருகே கொங்கலாபுரத்தில் வீட்டில் இரும்பு கேட் பெயர்ந்து விழுந்ததில் விளையாடிக் கொண்டிருந்த இரு சிறுமிகள் இடிபாடுகளில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

சிவகாசி அருகே கொங்கலாபுரத்தை சேர்ந்தவர் ராஜேஸ்வரி. இவர் சிவகாசி நகர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகள் கமலிகா (9) சிவகாசியில் உள்ள பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வருகிறார். ராஜேஸ்வரியின் தங்கை தனலட்சுமியின் மகள் ரிஷிகா (4). பள்ளி விடுமுறை என்பதால் கமலிகா, ரிஷிகா இருவரும் வீட்டில் விளையாடி வந்தனர்.

வீட்டு வாசலில் விளையாடியபோது, வீட்டின் இரும்பு கேட் அஸ்திவாரம் பெயர்ந்து குழந்தைகள் மீது விழுந்தது. இதில் படுகாயமடைந்த குழந்தைகளை உறவினர்கள் மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தைகள் இருவரும் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து சிவகாசி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த சிறு குழந்தைகள் மீது இரும்பு கேட் விழுந்து உயிரிழந்த சம்பவம் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

SCROLL FOR NEXT