திருச்சி: துவரங்குறிச்சி அருகே ஏற்பட்ட கார் விபத்தில், மாமனார், மருமகள் உயிரிழந்தனர். மேலும், மகனுக்கு மதுரை தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மதுரை மாவட்டம், நாகமலை புதுக்கோட்டை, எல்ஜி நகரைச் சேர்ந்த தனியார் கல்லூரி பேராசிரியர் பெட்ரிக் (55). இவரது மகன் மெல்வின் (33). சென்னை மென்பொருள் நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஆரோக்கிய பிரிசில்லா (26). இந்நிலையில் மூவரும் மதுரையில் உள்ள தங்கள் ஊருக்கு செல்ல சென்னையிலிருந்து நேற்று இரவு காரில் புறப்பட்டனர். காரை மெல்வின் ஓட்டி வந்தார்.
கார் இன்று காலை துவரங்குறிச்சி - நத்தம் தேசிய நெடுஞ்சாலை கோசிக்குறிச்சி, கிருஷ்ணாபுரம் அருகில் சென்ற போது ஓட்டுநரின் கட்டுப்பட்டை இழந்து சாலையின் இடதுபுறம் பாலத்தின் மோதியதில் காரின் முன் பகுதி கடும் சேதமானது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே பெட்ரிக் உயிரிழந்தார்.
படுகாயமடைந்த மெல்வின் மற்றும் அவரது மனைவி ஆரோக்கிய பிரிசில்லா ஆகிய இருவரையும் அப்போது இருந்த மக்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் துவரங்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கிருந்து மேல் சிகிச்சைக்கு மதுரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது, ஆரோக்கிய பிரிசில்லா செல்லும் வழியில் உயிரிழந்தார். தகவல் அறிந்த துவரங்குறிச்சி இன்ஸ்பெக்டர் விஜய் கோல்டன் சிங் நேரில் சென்று விசாரணை செய்து, பெட்ரிக் உடலைக் கைப்பற்றி உடல் ஊராய்வுக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
ஆரோக்கிய பிரசில்லா உடல் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. மெல்வின் மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து துவரங்குறிச்சி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.