சேலம்: பெங்களூரு ராஜாஜி நகரைச் சேர்ந்தவர் வாடகைக் கார் ஓட்டுநர் இந்து சேகர் (52). இவர் கடந்த 2006-ம் ஆண்டு சுனிதா (40) என்பவரைத் திருமணம் செய்துள்ளார். சுனிதாவின் தாய் மற்றும் சகோதரர்கள் தங்களது குடும்பத்தில் அடிக்கடி குழப்பம் ஏற்படுத்தி வந்ததால், இந்து சேகர் அவர்கள் மீது கோபத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், சுனிதாவின் சகோதரர் சங்கரின் மாமியார், தனது குடும்பத்தினர் அடுத்தடுத்து காணாமல் போய்விட்டதாக பெங்களூரு ஸ்ரீராமபுரா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, இந்து சேகர் மீது சந்தேகமடைந்த போலீஸார் அவரைப் பிடித்து விசாரணை நடத்தினர்.
அப்போது, தனது மனைவி சுனிதா, மாமியார் ரூபாவதி (65), அவரது சகோதரர்கள் சிவகுமார் (42), சிவகுமாரின் மனைவி திவ்யா (36), மற்றொரு சகோதரர் சங்கர் (32), சங்கரின் மனைவி நளினி (32), 7 வயது சிறுவன் புனீத் உள்ளிட்ட 7 பேரையும் கொலை செய்ததாக தெரிவித்த இந்து சேகர், அவர்களது உடல்களை நந்திமலை, சார்வாடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வீசியதாகவும் போலீஸாரிடம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, அவர் குறிப்பிட்ட இடங்களில் பெங்களூரு ராமபுரா போலீஸார் உடல்களைத் தேடி வருகின்றனர். இதற்கிடையே, 2 உடல்களை சேலம் மாவட்டம் ஏற்காடு மலைப்பகுதியில் வீசியதாக இந்து சேகர் தெரிவித்தார்.
இதையடுத்து, டிஎஸ்பி பிரபாவதி தலைமையில், ஒரு இன்ஸ்பெக்டர், ஒரு எஸ்ஐ உள்ளிட்ட 7 பேர் கொண்ட பெங்களூரு போலீஸ் குழுவினர், கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இந்து சேகரை அழைத்துக் கொண்டு நேற்று ஏற்காடு மலைப்பகுதிக்கு வந்தனர். ஏற்காடு நாகலூர் அருகே காட்டுப்பகுதியில், பாலித்தீன் கவர் மற்றும் சேலையால் சுற்றப்பட்டு வீசப்பட்டிருந்த 2 பெண் உடல்களை கர்நாடகா போலீஸார் மீட்டனர். அது, இந்து சேகரின் மனைவி சுனிதா, மாமியார் ரூபாவதி ஆகியோரின் உடல்கள் என தெரியவந்துள்ளது.