பொன்னம்மாள், பழனி , துளசிதாஸ்
ஆவடி: சென்னை, அம்பத்தூர் அருகே உள்ள சூரப்பட்டு, துலுக்கானத்தம்மன் கோயில் 7-வது தெருவைச் சேர்ந்தவர் பொன்னம்மாள் (70). இவரது கணவர் தாமோதரன் சென்னை துறைமுகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
இத்தம்பதிக்கு 6 மகள்கள் உள்ளனர். அவர்கள் திருமணமாகி குடும்பத்துடன் வெவ்வேறு இடங்களில் வசித்து வருகின்றனர். பொன்னம்மாளின் கணவர் 2006-ம் ஆண்டு உயிரிழந்ததால், அவர் தனியாக வசித்து வந்தார்.
இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு 7.45 மணியளவில் பொன்னம்மாள் வீட்டுக்கு ஆட்டோவில் வந்த 2 பேர், இரவு 8.45 மணியளவில் திரும்பி சென்றனர். சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் பொன்னம்மாள் வீட்டுக்கு சென்று பார்த்தபோது, பொன்னம்மாள், கை, கால்கள் கட்டப்பட்டு முகம் கழுத்து பகுதியில் காயங்களுடன் உயிரிழந்தது தெரிய வந்தது.
புதூர் போலீஸார், பொன்னம்மாளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, பொன்னம்மாளின் 5-வது மகள் கெஜலட்சுமி அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து முதல் கட்ட விசாரணை நடத்தினர்.
அதில், பொன்னம்மாள், சூரப்பட்டு பகுதியில் உள்ள தன் குடும்பத்துக்கு சொந்தமான ரூ.1.5 கோடி மதிப்பிலான நிலத்தை விற்பனை செய்ய ஏற்பாடு செய்து, ரூ.31 லட்சத்தை முன் பணமாக பெற்று, அதனை தன் 6 மகள்களுக்கு தலா ரூ.5 லட்சம் என, பிரித்து கொடுத்துவிட்டு மீதி பணத்தை தன் வங்கிக் கணக்கில் வைத்திருந்தது, தெரிய வந்துள்ளது.
இதையடுத்து நேற்று சூரப்பட்டை சேர்ந்த செல்வம், காஜாமொய்தீன், மாதவன் ஆகிய பெயர்களில் அழைக்கப்படும் நிலத்தரகரான பழனி (44), வியாசர்பாடியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் துளசிதாஸ் (51) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.
பொன்னம்மாளும், பழனியும் ஒரே பகுதியில் வசித்து வந்துள்ளனர். பொன்னம்மாளின் குடும்ப நிலத்தை விற்பதற்கு பழனி இடைத்தரகராக செயல்பட்டு வந்துள்ளார். இதனால் பொன்னம்மாள், தன் குடும்ப நிலத்தை விற்பதற்காக முன்பணம் பெற்றதை அறிந்த பழனி, அப்பணம் வீட்டில் இருக்கும் என்று நினைத்து அதனை கொள்ளையடிக்க திட்டமிட்டுள்ளார்.
ஆனால், நிலத்தை வாங்க இருந்தவர், முன்பணத்தை பொன்னம்மாளின் 6 மகள்களுக்கு தலா ரூ.5 லட்சம், பொன்னம்மாளுக்கு ரூ.1 லட்சம் ரூபாய் என, அவர்களின் வங்கி கணக்குகளில் செலுத்தியுள்ளார்.
இதனையறியாத பழனி, ரூ.31 லட்சம் பொன்னம்மாள் வீட்டில் இருக்கிறது என, நினைத்து தன் நண்பரான துளசிதாஸுடன் ஆட்டோவில் பொன்னம்மாள் வீட்டுக்கு வந்து அவரை கொலை செய்துள்ளார். ரூ.31 லட்சம் பீரோவில் இல்லாததால், பீரோவில் இருந்த ரூ.8 ஆயிரம், பொன்னம்மாள் அணிந்திருந்த வளையல், கம்மல்கள் என, 4 பவுன் நகைகளை கொள்ளையடித்துவிட்டு, இருவரும் தப்பினர்.இவ்வாறு விசாரணையில் தெரிந்தது.
மேலும், பழனியும், துளசிதாஸும் பொன்னம்மாளை கொலை செய்து கொள்ளையடித்த நகைகளை அடகு வைத்து, ரொக்கமாக வைத்திருந்த ரூ.1.19 லட்சம், பொன்னம்மாள் வீட்டில் கொள்ளையடித்த ரூ. 8 ஆயிரம் என ரூ. 1.27 லட்சத்தை போலீஸார் கைப்பற்றியுள்ளனர்.