சென்னை: தவெக கூட்டத்தில் பாட்டில் வீசப்பட்ட விவகாரத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டனர். நடைபெற உள்ள தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, வில்லிவாக்கம் சட்டப்பேரவை தொகுதி தவெக வேட்பாளரான ஆதவ் அர்ஜூனா அறிமுக கூட்டம் அயனாவரத்தில் நேற்றுமுன்தினம் இரவு நடைபெற்றது.
கூட்டத்தில், கட்சியின் நிர்வாகி நாஞ்சில் சம்பத் பேசி கொண்டிருந்த போது பெண்கள் அமர்ந்திருந்த இடத்தில் உடைந்த கண்ணாடி பாட்டில் துண்டுகள் வந்து விழுந்தது. இதில், கீழ்ப்பாக்கம், குட்டியப்பன் தெருவைச் சேர்ந்த கலைவாணி (45) என்பவர் காயம் அடைந்தார். மேலும், கூட்டத்தில் இருந்தவர்கள் பயந்து அங்கிருந்து கலைந்தனர்.
இதனால், ஆத்திரம் அடைந்த தவெக நிர்வாகிகள் ஆதவ் அர்ஜூனா, வி.எஸ்.பாபு உள்பட பலர் அடுத்தடுத்து கண்டனம் தெரிவித்ததோடு, தாக்குதலில் ஈடுபட்டவர்களை கைது செய்ய வேண்டும் எனக் கூறி போலீஸாருடன் வாக்குவாதம் செய்தனர். அவர்களை போலீஸார் சமாதானம் செய்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக, தவெக சார்பில் அயனாவரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்படி, போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். பொதுக்கூட்டம் நடைபெற்ற இடத்தின் அருகே உள்ள லாட்ஜில் தங்கி இருந்த இருவரை பிடித்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.
இதில், பிடிபட்டது அயனாவரம் பொன்வேல்புரத்தைச் சேர்ந்த அப்புகுட்டி மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த ரித்திக் (19) என்பது தெரிய வந்தது. அப்புகுட்டி மின்வாரியத்தில் ஒப்பந்த அடிப்படையி்லும், ரித்திக் ஏசி மெக்கானிக்காக வேலை செய்து வருவதும் தெரிய வந்தது.
நண்பர்களான இருவரும் லாட்ஜில் இருந்ததும், மதுபோதையில் சண்டையிட்டதில் மதுபாட்டிலை ஒருவர் மீது ஒருவர் வீசியதில் தவறுதலாக மதுபாட்டில் உடைந்்து தவெக பொதுக் கூட்டத்தில் அமர்ந்திருந்த பெண் மீது விழுந்து இடது கால் முட்டியில் காயம் ஏற்பட்டது தெரிய வந்ததாக போலீஸார் தெரிவித்தனர். இதையடுத்து, இருவரும் கைது செய்யப்பட்டனர்.