க்ரைம்

சென்னை | தகராறு குறித்து விசாரிக்கச் சென்ற உதவி ஆய்வாளர், காவலரை தாக்கிய இருவர் கைது

செய்திப்பிரிவு

சென்னை: போலீஸார் மீது தாக்குதல் நடத்திய இருவர் கைது செய்யப்பட்டனர். சென்னை, கொருக்குப் பேட்டை, எம்எஸ் நாயுடு தெருவில் டாஸ்மாக் மதுபானக் கடை உள்ளது. அதனருகே சிலர் தகராறில் ஈடுபடுவதாக போலீஸாருக்கு நேற்று முன்தினம் புகார் சென்றது.

இதையடுத்து, கொருக்குப்பேட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளர் தனசேகரன், காவலர் ராஜ்குமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அப்போது, அங்கு தகராறு செய்து கொண்டிருந்த 3 இளைஞர்களை கண்டித்து, அங்கிந்து செல்லுமாறு போலீஸார் எச்சரித்தனர்.

          

இதில், போலீஸாருக்கும், அவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. உடனே அந்த நபர்கள் உதவி ஆய்வாளர் தனசேகரனையும், காவலர் ராஜ்குமாரையும் தாக்கினர்.

இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், காயமடைந்த போலீஸாரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதே வேளையில், தாக்குதல் சம்பவம் குறித்து தகவலறிந்து அங்கு வந்த கொருக்குப்பேட்டை போலீஸார், அங்கிருந்த 3 பேரில், இருவரை பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.

இதில், பிடிபட்டவர்கள் பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த மணிகண்டன் (26), அதேப் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் (40) என்பது தெரிய வந்தது. இதையடுத்து, இருவரையும் போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT