மகன் ஆதித்யன் | தந்தை ராஜா
திருவாரூர்: திருவாரூர் அருகே விவசாய நிலத்துக்கு மேல் சென்ற உயரழுத்த மின் கம்பி அறுந்து விழுந்ததில், மின்சாரம் பாய்ந்து விவசாய தொழிலாளர் மற்றும் அவரது தந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டம் புதூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜா (50), இவரது மகன் ஆதித்யன் (26) இவர்கள் இருவரும் விவசாய தொழிலாளர்களாக இருந்தனர். இவர்களுக்கு சொந்தமாக ஒரு டிராக்டரும் உள்ளது. இந்த நிலையில் புதூர் கிராமத்தில் விவசாயி ஒருவரது நிலத்தில் டிராக்டர் மூலம் உழவு செய்யும் பணியில் மகன் ஆதித்தனும், விதை தெளிக்கும் பணியில் அவரது தந்தை ராஜாவும் ஈடுபட்டிருந்தனர்.
இந்த நிலையில் டிராக்டர் உழவு ஓடிக்கொண்டிருக்கும்போது எதிர்பாராத விதமாக உயர் அழுத்த மின்கம்பி அறுந்து டிராக்டர் மீது விழுந்ததில் மின்சாரம் பாய்ந்து மகன் ஆதித்தன் உடல் பற்றி எரிந்துள்ளது. இந்த நிலையில் அதனை கண்ட தந்தை ராஜா வேகமாக ஓடிச் சென்று மகனை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்ட போது அவர் மீதும் மின்சாரம் பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே தந்தை, மகன் இருவரும் உயிரிழந்தனர்.
உடனடியாக அங்கிருந்தவர்கள் திருவாரூர் தாலுகா காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் இருவரது உடல்களையும் மீட்டு, திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விவசாயப் பணி ஈடுபட்டு கொண்டுருந்த தந்தை,மகன் இருவரும் வயலில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.