நாகர்கோவில்: நாகர்கோவிலில் உள்ள கல்லூரியில் பயிலும் மாணவி ஒருவர், கன்னியாகுமரி மத்திய மாவட்ட தவெக இளைஞர் அணி நிர்வாகியான தனது தோழியுடன் நேற்று முன்தினம் மாலை பேருந்துக்காக காத்திருந்தார்.
அப்போது, மத்திய மாவட்ட தவெக செயற்குழு உறுப்பினர் கிறிஸ்டோபர் அந்த வழியாக காரில் வந்தார். அவரது காரில் இருவரும் ஏறினர். முதலில் தனது ஊரில் தவெக பெண் நிர்வாகி இறங்கிக்கொண்டார்.
கல்லூரி மாணவியை அவரது ஊரில் கொண்டு விடுவதாக கூறி அழைத்துச் சென்ற கிறிஸ்டோபர், பாதி வழியில் காரை நிறுத்தி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அதிர்ச்சி அடைந்த மாணவி, அவரை கடுமையாக திட்டிவிட்டு இறங்கிச் சென்றுள்ளார்.
இதுகுறித்து, தவெக நிர்வாகியான தனது தோழியிடம் புகார் கூறி மாணவி அழுதுள்ளார். இதையடுத்து அவர் கொற்றிக்கோடு காவல் நிலையத்துக்கு மாணவியை அழைத்துச் சென்று புகார் அளித்துள்ளார். ஆனால், வழக்கு பதிவு செய்யாமல் போலீஸார் அலைக்கழித்தனர்.
மாணவிக்கு நேர்ந்த துயரம் குறித்த தகவல் நேற்று சமூக வலைதளங்களில் பரவியது. இதையடுத்து மாவட்ட எஸ்.பி. அன்சுல் நாகர் உத்தரவின் பேரில், தக்கலை மகளிர் போலீஸார் விசாரணை நடத்தி, கிறிஸ்டோபர் மீது வழக்கு பதிவு செய்து, அவரைத் தேடி வருகின்றனர்.