போலீஸார் பறிமுதல் செய்த கார், குட்கா மூட்டைகள். (உள்படம்) அருள்செல்வன்
சென்னை: ஆந்திராவில் இருந்து தமிழகத்துக்கு காரில் குட்கா கடத்தி வந்த வியாபாரி கைது செய்யப்பட்டார். தடை செய்யப்பட்ட குட்கா, போதைப் பொருட்களுக்கு எதிராக சென்னையில் சிறப்பு கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நந்தம்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான போலீஸார், ரகசிய தகவலின் பேரில் நேற்று முன்தினம் நந்தம் பாக்கம் கலைஞர் நகர் பிரதான சாலை - ஏழுகிணறு சாலை சந்திப்பில் கண்காணித்தனர்.
அப்போது, ஒருவர் காரில் இருந்து மூட்டைகளை இறக்கிக் கொண்டிருந்தார். போலீஸார் சென்று சோதனை நடத்தியதில், மூட்டைகளில் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பாக்கெட்கள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.
அவர் பல்லாவரம் பகுதியைச் சேர்ந்த அருள் செல்வன் (42) என்பதும், ஆந்திராவில் இருந்து குட்கா புகையிலைப் பொருட்களை மொத்தமாக வாங்கி வந்து, சென்னையின் பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்து வந்ததும் தெரிந்தது.
அவரை போலீஸார் கைது செய்து, குட்கா மூட்டைகளை பறிமுதல் செய்தனர். அவர் மீது ஏற்கெனவே 3 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீஸார் கூறினர்.