க்ரைம்

சென்னையில் ஒரே நாளில் விபத்துகளில் 3 பேர் உயிரிழப்பு | செவிலியர் மீது மோதிய மருத்துவமனை வேன்

செய்திப்பிரிவு

சென்னையில் நிகழ்ந்த சாலை விபத்துகளில் 3 பேர் உயிரிழந்தனர். மருத்துவமனை வேன் மோதியதில் அதே மருத்துவமனையின் செவிலியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பெரம்பூர் பந்தர் கார்டன் பகுதியை சேர்ந்தவர் தீபிகா (22). ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்தார். வழக்கம் போல நேற்று காலை தனது இருசக்கர வாகனத்தில் அவர் பணிக்கு புறப்பட்டார்.

ஓட்டேரி திடீர் நகர் அருகே சென்றபோது, வேன் ஒன்று எதிர்பாராதவிதமாக அவரது இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில், அவர் உயிரிழந்தார். கீழ்ப்பாக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் அவரது உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

போலீஸார் நடத்திய விசாரணையில், அந்த வேன், தீபிகா பணியாற்றும் அதே மருத்துவமனையின் ஊழியர்களை ஏற்றிச்சென்ற வேன் என்பது தெரியவந்தது. இதையடுத்து, வேன் ஓட்டுநரான தஞ்சாவூரை சேர்ந்த சீனிவாசனை போலீஸார் கைது செய்தனர். தான் பணியாற்றும் அதே மருத்துவமனையின் வேன் மோதி, செவிலியர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தரமணியை சேர்ந்த லோகேஸ்வரன் (27), நேற்று அதிகாலை தனது நண்பர் மணிகண்டனுடன் இருசக்கர வாகனத்தில் தரமணி 100 அடி சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது, கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம், சாலையின் தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. தலையில் பலத்த காயம் அடைந்த லோகேஸ்வரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

படுகாயம் அடைந்த நண்பர் மணிகண்டன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதேபோல, நீலாங்கரை வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் அருகே அடையாளம் தெரியாத கார் மோதியதில், 50 வயது மதிக்கத்தக்க நபர் உயிரிழந்தார். இந்த 2 விபத்துகள் குறித்து அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT