கடலூர்: சேத்தியாத்தோப்பு அருகே மின்கம்பி மீது மரம் விழுந்ததில் மின்சாரம் பாய்ந்து 3 பேர் உயிரிழந்தனர்.
கடலூர் மாவட்டத்தில் நேற்று காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இந்நிலையில், சேத்தியாத்தோப்பு அருகேயுள்ள சி.சாத்தமங்கலம் கிராமத்தில் நேற்று பிற்பகல் ஒரு புளியமரம் வேரோடு சாய்ந்து மின்கம்பம் மீது விழுந்தது. இதில் மின்கம்பம் உடைந்தும், மின்கம்பி அறுந்தும் அருகே இருந்த வீடுகள், தேவாலயத்தின் மீது விழுந்தன.
இதில், தேவாவலயத்தின் வெளியே அமர்ந்திருந்த மரியசூசை (70), அவரது மனைவி பிளவுன்மேரி (60) மற்றும் ரோசாப்பூ என்பவரது மனைவி வனதாஸ்மேரி (70) ஆகியோர் மின்சாரம் பாய்ந்து அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், அதே ஊரைச் சேர்ந்த கனகராஜ் (58) காயமடைந்து, அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
தகவலறிந்து வந்த ஒரத்தூர் போலீஸார் 3 பேரின் உடல்களையும் மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து நடத்தி வருகின்றனர். தொடர்ந்து, சேத்தியாத்தோப்பு டிஎஸ்பி விஜிகுமார், சிதம்பரம் வட்டாட்சியர் கீதா மற்றும் மின்வாரியத் துறையினர் விபத்து நடந்த இடத்தில் விசாரணை மேற்கொண்டனர்.