பாண்டீஸ்வரி, முருகேஸ்வரி, ராஜபாண்டி
மதுரை: குடும்பம் நடத்த வர மறுத்த கணவர் மற்றும் அவரது உறவினர்கள் 7 பேரை பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொன்ற வழக்கில் மனைவி உள்பட 3 பேருக்கு தலா 8 ஆயுள் தண்டனை வழங்கி மதுரை நீதிமன்றம் முக்கியத் தீர்ப்பளித்துள்ளது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள குமாரபுரத்தைச் சேர்ந்தவர் கண்ணன் (25). இவருக்கும் பாண்டீஸ்வரி (21) என்பவருக்கும் 2012-ல் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த சில நாட்களிலேயே கண்ணன் சென்னைக்குச் சென்றார்.
அதன் பிறகு அவர் பாண்டீஸ்வரியுடன் குடும்பம் நடத்தவில்லை. பாண்டீஸ்வரி பல முறை அழைத்தும் கண்ணன் வர மறுத்துவிட்டார். இதையடுத்து ஊர் பஞ்சாயத்தார்களை வைத்து இருதரப்பிலும் பேசப்பட்டது. இதில் கண்ணன் சேர்ந்து வாழ வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர். இதனையும் ஏற்க மறுத்த கண்ணன் குடும்பம் நடத்த வரவில்லை. இதையடுத்து இருவரும் நீதிமன்றம் சென்று பிரச்சினையை தீர்த்துக்கொள்ள அறிவுறுத்தியுள்ளனர்.
பெட்ரோல் ஊற்றி...
இந்நிலையில் கடந்த 2015 மே 20 அன்று இரவு கண்ணன், அவரது வீட்டில் குடும்பத்தினருடன் தூங்கிக் கொண்டிருந்தார். அதிகாலை 2 மணியளவில் பாண்டீஸ்வரி அங்கு வந்து வீட்டை வெளிப்புறமாக பூட்டி ஜன்னல் வழியாகவும், வீட்டின் மீதும் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார்.
இதில் கண்ணன், அவரது தந்தை வேலு (60), தாய் பேச்சியம்மாள் (55), சகோதரி மகள் சுகந்தி (35), சங்கீதா (17), வினித் (10), சங்கீத் (12) ஆகியோர் தீயில் கருகி உயிரிழந்தனர். பின்னர் பாண்டீஸ்வரி காவல் நிலையத்தில் சரண் அடைந்தார்.
இந்தச் சம்பவம் அப்போது தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது மேலும், இந்தக் கொலை தொடர்பாக பாண்டீஸ்வரி, அவரது தாயார்‘ முருகேஸ்வரி, சகோதரர் ராஜபாண்டி ஆகியோரை சேடபட்டி போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கை மதுரை 6-வது கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி உதயவேலவன் விசாரித்தார்.
போலீஸ் தரப்பில் அரசு வழக்கறிஞர் செந்தில்ராஜ் ஆஜராகி வாதிடும்போது குற்றம் செய்ததற்கான முகாந்திரங்களை விளக்கியதுடன், சாட்சி மற்றும் மரணம் விளைவித்தற்கான கருவிகளையும் காட்சிப்படுத்தி வாதிட்டார். இதையடுத்து விசாரணை முடிந்த நிலையில் மூவரும் குற்றம் இழைத்தது நிரூபிக்கப்பட்டது.
இதையடுத்து, அவர்களுக்கு தலா 8 ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூ.45 ஆயிரம் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பளித்தார். பின்னர் அவர்கள் மூவரும் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.