சென்னை: வேலை தேடுவோரை குறிவைத்து, அவர்களுக்கு வேலை வாங்கித் தருவதாக கூறி லட்சக்கணக்கில் பண மோசடியில் ஈடுபட்டதாக 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னை கொளத்தூரைச் சேர்ந்த 26 வயது பெண் ஒருவர், வீட்டிலிருந்து பணிபுரியும் வேலை தேடி வந்தார். கடந்த மே.20-ம் தேதி ராயப்பேட்டையில் உள்ள வணிக வளாகத்துக்குச் சென்றபோது, தனியார் நிறுவனத்தின் மனிதவளப் பிரிவு அதிகாரி என அறிமுகப்படுத்திக் கொண்ட பெண் ஒருவர், பின்னர் அவரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தங்கள் நிறுவனத்தில் வேலை இருப்பதாகக் கூறியுள்ளார்.
மேலும், வீட்டிலிருந்து வேலை செய்வதற்காக ரூ.4,500 முன்பணம் செலுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். இதனை நம்பிய அந்தப் பெண், ஜி-பே மூலம் ரூ.4,500 செலுத்தியுள்ளார். ஆனால், பணத்தைப் பெற்ற பிறகு வேலை குறித்த எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை.
இதனால், சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்குச் சென்று விசாரித்தபோது, அதன் உரிமையாளரான திருவள்ளூர் மாவட்டம், விளாங்காடுபாக்கத்தைச் சேர்ந்த ஆரோன் (31) என்பவர் வேலைவாய்ப்பு தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகத் தெரியவந்தது.
ஆரோனைத் தொடர்புகொள்ள பலமுறை முயன்றும் முடியவில்லை. மேலும், தன்னைப் போலவே பலரும் இதே முறையில் ஏமாற்றப்பட்டிருக்கலாம் என்பதை அறிந்த அந்தப் பெண், அண்ணா சாலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதன் பேரில் மோசடி மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டப்பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதையடுத்து, தலைமறைவாக இருந்த ஆரோனை போலீஸார் கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின்பேரில் அவரது கூட்டாளிகளான மாதவரத்தைச் சேர்ந்த கோகுல் நாத் (26), கொடுங்கையூரைச் சேர்ந்த அஜ்மல் பாஷா (32) ஆகிய மேலும் இருவரை போலீஸார் கைது செய்தனர்.
விசாரணையில், கைது செய்யப்பட்ட 3 பேரும் குழுவாகச் செயல்பட்டு, சென்னையின் பல்வேறு பகுதிகளில் அலுவலகங்களை அமைத்து, வேலை தேடும் பட்டதாரி இளைஞர்கள், இளம் பெண்கள் குறிவைத்து அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளனர்.
பின்னர், வேலை வாங்கித் தருவதாக நம்பிக்கையூட்டி, முன்பணம் மற்றும் பதிவுக் கட்டணம் என்ற பெயரில் லட்சக் கணக்கில் சிறுக சிறுக பணம் பெற்றுள்ளனர். இதேபோன்று மேலும் பலரிடம் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி லட்சக்கணக்கில் பணம் வசூலித்து மோசடி செய்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.
தொடர்ந்து கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது என போலீஸார் தெரிவித்துள்ளனர்.