க்ரைம்

தனியார் ஏடிஎம் இயந்திரம் கொள்ளை வழக்கில் 3 பேர் கைது

செய்திப்பிரிவு

திருவள்ளூர்: கூடப்பாக்கம் பகுதியில் தனியார் ஏடிஎம் இயந்திரம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர் அருகே உள்ள கூடப்பாக்கம், மேட்டுக் கண்டிகை பகுதியில், தனியார் நிறுவனத்தின் ஏடிஎம் மையம் செயல்பட்டு வந்தது. கடந்த 5-ம் தேதி மர்ம நபர்கள் இங்குள்ள ஏடிஎம் இயந்திரத்தை கொள்ளையடித்துச் சென்றனர். அந்த ஏடிஎம் இயந்திரத்தில் சில நாட்களுக்கு முன்புதான் ரூ.12,54,700 பணம் நிரப்பப்பட்டது. இக்கொள்ளைச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த வெள்ளவேடு போலீஸார், தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தீவிரமாக தேடி வந்தனர்.

போலீஸார் நடத்திய விசாரணையில், கொள்ளையர்கள் ஏடிஎம் இயந்திரத்தை அரண்வாயல் பகுதியில் கிருஷ்ணா கால்வாய் அருகே வைத்து உடைத்து, அதில் இருந்த பணத்தை எடுத்துச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, கண்காணிப்பு கேமரா காட்சிகள், செல்போன் சிக்னல்களை ஆய்வு செய்து ஏடிஎம் இயந்திரம் கொள்ளை தொடர்பாக கேரளாவில் பதுங்கியிருந்த, மேற்கு வங்கத்தைச் சேர்ந்த எஸ்.கே.சமீர் (36), சர்பார்கான் (50), ரசூல் (28) ஆகிய 3 பேரை நேற்று கைது செய்தனர்.

கைதானவர்களிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் தெரியவந்ததாவது: மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த சமீர் உள்ளிட்ட 7 பேர் தமிழகத்துக்கு வந்து பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்து கடைகளில் விற்பனை செய்து வந்துள்ளனர். கடந்த மாதம் சோமங் கலம், கும்மிடிப்பூண்டி பகுதி களில் நடந்த ஏடிஎம் கொள்ளை சம்பவங்கள் குறித்து அறிந்த இவர்கள், ஏடிஎம் இயந்திரத்தை கொள்ளையடிக்க திட்டமிட்டுள்ளனர். அதன்படி பல்வேறு பகுதிகளில் நோட்டமிட்டு, பாக்கம் பகுதி ஏடிஎம் இயந்திரத்தை கொள்ளையடிக்க முடிவு செய்தனர்.

இதையடுத்து அவர்கள் சோமங்கலம் அடுத்த நடுவீரப் பட்டு பகுதியில் சாலையோரத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த அமரர் ஊர்தியை திருடிக் கொண்டு சென்று கூடப்பாக்கத்தில் ஏடிஎம் இயந்திரத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். பிறகு அதை உடைத்து அதிலிருந்து பணத்தை 7 பேரும் பங்கு பிரித்துக்கொண்டு, இருசக்கர வாகனங்களில் தப்பிச் சென்றுள்ளனர் என்பது தெரியவந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

கைதான 3 பேரிடம் இருந்து ரூ.1.72 லட்சத்தையும், கொள்ளைச் சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்துள்ள போலீஸார், தலைமறைவாக உள்ள 4 பேரை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

நசரத்பேட்டை காவல் நிலையத்தில் வைத்து விசாரிக்கப்பட்டு வந்த 3 பேரிடம் நேற்று ஆவடி மாநகர காவல் ஆணையர் செந்தில்குமார், ஆவடி காவல் துணை ஆணையர் வினோத் சாந்தாராம் ஆகியோர் தீவிர விசாரணை நடத்தினர். கைதானவர்களை கொள்ளைச் சம்பவம் நடைபெற்ற பகுதிகளுக்கே அழைத்துச் சென்று போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர்.

SCROLL FOR NEXT