தாமரைக்கண்ணன் | மதிவாணன் | இளம்பரிதி
அரியலூர்: அரியலூர் அருகே நள்ளிரவில் மது அருந்திய நபர்களை தட்டிக் கேட்ட காவலர்கள் மீது தாக்குதல் நடத்திய மூவர் கைது செய்யப்பட்டனர்.
அரியலூர் மாவட்டம் செந்துறையை அடுத்த தளவாய் காவல் நிலையத்தில், காவலராக பணிபுரிந்து வருபவர் ராஜகண்ணன் (32). அதே காவல் நிலையத்தில் ஊர்க்காவல் படை வீரராக பணிபுரிந்து வருபவர் வெங்கடேசன் (47). இவர்கள் இருவரும் வழக்கம்போல நேற்று இரவு ரோந்து பணியை மேற்கொண்டுள்ளனர்.
அப்போது தளவாய் காவல் நிலையத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவிலுள்ள தனியார் சிமென்ட் ஆலை அருகே லாரி செட் ஒன்றின் முன்பாக 3 நபர்கள் மது அருந்திக் கொண்டிருந்துள்ளனர்.
அவர்கள் அருகிலுள்ள கிராமத்தை சேர்ந்தவர்கள் என்பதால், ‘இரவு 12 மணி ஆகப் போகிறது, இன்னும் இந்த இடத்தில் அமர்ந்து மது அருந்துவது தவறு’ எனக் கூறி காவலர்கள் கண்டித்து விட்டு, உடனடியாக புறப்பட்டுச் செல்ல கூறி என தங்களது ரோந்து பணியை தொடர்ந்துள்ளனர்.
நள்ளிரவுக்குப் பின் 2 மணி அளவில் மீண்டும் அவர்கள் வந்தபோது விநாயகர் கோயிலுக்கு அருகில் உள்ள மரப்பட்டறை சந்தில் அமர்ந்து அவர்கள் மீண்டும் மது அருந்துவதை தொடர்ந்துள்ளனர்.
அதிகாலை நேரத்தில் விநாயகர் கோயில் அருகே மது அருந்துவதை தொடர்ந்ததால், வேறு ஏதேனும் காரணமாக இருக்குமோ என சந்தேகம் அடைந்த காவலர்கள் ராஜகண்ணன் மற்றும் வெங்கடேசன் ஆகிய இருவரும், அவரவர் ஊருக்கு கிளம்பிச் செல்லுங்கள் என இருசக்கர வாகனத்தை நிறுத்தி அருகில் சென்று எச்சரித்துள்ளனர். அப்போது, ‘நாங்கள் இங்கு தான் அமர்வோம், மது அருந்துவோம். உங்களால் என்ன செய்ய முடியும்?’ என அதிகாரமாக காவலர்கள் இருவரையும் தரக்குறைவாக பேசியுள்ளனர். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
உடனடியாக காவலர் ராஜகண்ணன், தளவாய் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்துக் கொண்டிருக்கும் போதே காவலர்கள் மீது மூன்று நபர்களும் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளனர். இதனை சற்றும் எதிர்பாராத ஊர்க்காவல் படை வீரர் வெங்கடேசன், காவலர்கள் மீது கை வைக்கிறாயா எனக் கூறி தாக்குதலில் ஈடுபட்டுபவர்களை தடுத்து நிறுத்த முற்பட்டுள்ளார். இதனால் மேலும் ஆத்திரம் அடைந்த போதை கும்பல், காவலர் ராஜகண்ணன் இரு கைகளையும் முறுக்கிப் பிடித்தவுடன் ஊர்க்காவல் படைவீரர் வெங்கடேசன் மீது கொடூரத் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
குறிப்பாக வெங்கடேசனின் முகத்தை குறிவைத்தே கைகளாலேயே ஓங்கி குத்தியபடியே இருந்துள்ளனர். இதனால் நிலைகுலைந்த வெங்கடேசன் அங்கேயே மயக்கம் அடைந்து விழுந்ததாக கூறப்படுகிறது. அதற்குள் சக காவலர்கள் விரைந்து வந்த நிலையில் மூவரையும் மடக்கிப் பிடித்துள்ளனர்.
காயமடைந்த வெங்கடேசன் மற்றும் ராஜகண்ணன் ஆகியோரை 108 ஆம்புலன்ஸ் மூலம் செந்துறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். போதை நபர்களைப் பிடித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விசாரணையில் சிலப்பனுர் கிராமத்தை சேர்ந்த மதிவாணன்(26) தாமரைக்கண்ணன்(24), பரிதி(25) ஆகிய மூவரும் மது அருந்தியதும் காவலர்கள் மீது தாக்குதல் நடத்தியதும் தெரியவந்தது. அவர்களிடமிருந்து இரண்டு இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்து தளவாய் காவல் துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட ஊர்க்காவல் படை வீரர் வெங்கடேசன் ஆபத்தான நிலையில் இருந்ததால் அவரை உடனடியாக அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் வெங்கடேசனின் தலைப்பகுதியில் கடுமையாக தாக்குதல் நடந்துள்ளதால் அவரை திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் வாகன மூலம் அனுப்பி வைத்தனர்.
ரோந்து பணியில் இருந்த காவலர்கள் மீது மது போதை நபர்கள் தாக்குதல் நடத்தியது அரியலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அவர்கள் மது அருந்திய இடத்துக்கு அருகிலேயே கள்ளத்தனமாக மது விற்பனை செய்து வருவதும் குறிப்பிடத்தக்கது.