பிரதிநிதித்துவப் படம்
நெல்லை: மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு தூக்கு தண்டனை விதித்து நெல்லை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி பகுதியைச் சேர்ந்த 47 வயது தொழிலாளிக்கு, 14 வயதில் மகள் உள்ளார். இந்நிலையில், அச்சிறுமியை தந்தையே பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதில் அந்தச் சிறுமி கர்ப்பமடைந்தார். இதுகுறித்து தகவலறிந்த நாங்குநேரி மகளிர் போலீஸார், போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து, சிறுமியின் தந்தையை கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை திருநெல்வேலி போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார், இந்த வழக்கு விசாரணையை 7 மாதங்களில் முடித்தார். இதில், சிறுமியின் தந்தைக்கு தூக்கு தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து இன்று தீர்ப்பளித்தார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ரூ.10 லட்சம் நிவாரண நிதி வழங்குமாறும் உத்தரவிட்டார்.
“பெற்ற மகளைப் பாதுகாக்க வேண்டிய தந்தையே, இத்தகைய கொடூர இழிசெயலில் ஈடுபட்டது சமூகத்தில் மன்னிக்க முடியாத மிகப் பெரிய கொடூரக் குற்றமாகும்.
இந்தக் குற்றம் சந்தேகத்துக்கு இடமின்றி அரசுத் தரப்பில் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதிக்கப்படுகிறது” என்று நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கில் காவல் துறை தரப்பில், அரசு வழக்கறிஞர் உஷா ஆஜரானார். வழக்கு விசாரணையில் சிறப்பாகச் செயல்பட்ட அரசு வழக்கறிஞர் மற்றும் காவல் துறையினருக்கு திருநெல்வேலி சரக டிஐஜி (பொறுப்பு) சந்தோஷ் ஹாதிமணி, எஸ்.பி. சிலம்பரசன் ஆகியோர் பாராட்டுத் தெரிவித்தனர்.