மும்பை: மகாராஷ்டிர மாநிலம் நாசிக் நகரில் உள்ள டிசிஎஸ் நிறுவனத்தில் 2021 முதல் பிராசஸ் அசோசியேட்டாகப் பணியாற்றி வந்த நிடா கான், சக ஊழியர்களுக்கு இஸ்லாமிய மதப் புத்தகங்கள் மற்றும் வீடியோக்களை அனுப்பி அவர்களை மதமாற்றம் செய்யத் தூண்டியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் ஏற்கெனவே நிறுவனத்தில் பணியாற்றிய 7 பேர் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து, நிடா கான் தலைமறைவானார். அவரை பிடிக்க மும்பை மற்றும் நாசிக் போலீஸார் இணைந்து அதிரடி வியூகம் வகுத்தனர். சத்ரபதி சம்பாஜி நகரின் நரேகான் பகுதியில் உள்ள கைசர் காலனியில் ஒரு வாடகை வீட்டில் அவர் பதுங்கி இருப்பதாக ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, கடந்த 3 முதல் 4 நாட்களாக அந்தப் பகுதியைப் போலீஸார் சாதாரண உடையில் ரகசியமாகக் கண்காணித்து வந்தனர்.
போலீஸ் ஜீப்புகளுக்குப் பதிலாகத் தனியார் வாகனங்களைப் பயன்படுத்தினர். சுமார் 20-க்கும் மேற்பட்ட போலீஸார் அந்த வீட்டைச் சுற்றிலும் மாறுவேடத்தில் முகாமிட்டிருந்தனர். நிடா கான் தனது தந்தை, தாயுடன் அந்த வீட்டில் தங்கியிருப்பதை தொழில்நுட்ப ஆய்வுகள் மூலம் போலீஸார் உறுதி செய்தனர். உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்ய அவர் திட்டமிட்டிருந்த நிலையில், முன்கூட்டியே செயல்பட்ட போலீஸார் வீட்டைச் சுற்றி வளைத்து அவரைக் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட நிடா கான், நேற்று முன்தினம் நள்ளிரவு நீதிபதியின் இல்லத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். விசாரணைக்காக அவரை நாசிக் அழைத்துச் செல்ல போலீஸாருக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.