சென்னை: 2 மாதங்களுக்கு முன்பு காணாமல் போன மாற்றுத் திறனாளி வழக்கில் திடீர் திருப்பமாக அவர் கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் மகேந்திரன் (26). வாய் பேச முடியாத, காது கேளாத மாற்றுத் திறனாளி. இவர் சென்னை புழல் கேம்ப் பகுதியில் தங்கி மாதவரத்தில் உள்ள பிரபல ஜவுளிக் கடைகிடங்கில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.
கடந்த டிச.26 முதல் இவர் மாயமானார். இது தொடர்பாக புழல் காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்தனர். அதன்படி போலீஸார் வழக்குப் பதிந்து தேடி வந்தனர். முதல் கட்டமாக மகேந்திரனுடன் வேலை செய்து வந்த திருவள்ளூர் மாவட்டம், புட்லூரை சேர்ந்த லாரன்ஸ் (45) என்பவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இதில் போலீஸாருக்கு எந்த துப்பும் கிடைக்கவில்லை. இந்நிலையில், மாயமான மகேந்திரனின் செல்போன் திருவள்ளூர் மாவட்டம், புட்லூரில் செயல்பாட்டில் இருப்பது போலீஸார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து புழல் போலீஸார் அங்கு சென்று மற்றொரு மாற்றுத் திறனாளியான (காது கேளாத வாய் பேச முடியாதவர்) வைத்தியநாதன்(40) என்பவரைப் பிடித்து காவல் நிலையம் அழைத்துச் சென்று, சைகை மொழியில் பேசத் தெரிந்தவர் துணையுடன் விசாரித்தனர்.
அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. கொலைக்கான காரணம் கொலை செய்யப்பட்ட மகேந்திரன், கைது செய்யப்பட்ட லாரன்ஸ் இருவரும் ஒரே இடத்தில் வேலை பார்த்து வந்ததால்நண்பர்களாகி உள்ளனர்.
அடிக்கடி ஒன்றாகச் சேர்ந்து மது அருந்தியுள்ளனர். மேலும் லாரன்ஸ் வீட்டுக்கு மகேந்திரன் அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போது லாரன்ஸின் மாற்றுத் திறனாளி மனைவியுடன் மகேந்திரனுக்கு பழக்கம் ஏற்பட்டு இருவரும் நெருங்கியுள்ளனர்.
இதையறிந்த கணவரான லாரன்ஸ், மனைவியைக் கண்டித்துள்ளார். ஆனால் அவர் கேட்கவில்லையாம். இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் லாரன்ஸ் மனைவி அவரைப் பிரிந்து மகேந்திரனுடன் புழலில் வீடு எடுத்து தனிக்குடித்தனம் நடத்தினாராம்.
இதனால் ஆத்திரமடைந்த லாரன்ஸ் தன் மனைவியை அபகரித்துச் சென்ற மகேந்திரனை பழிவாங்கத் திட்டம் தீட்டியுள்ளார். இதற்கிடையே மகேந்திரன் தனது மாற்றுத் திறனாளி அடையாள அட்டையை திருநெல்வேலி முகவரியிலிருந்து சென்னைக்கு மாற்ற முயற்சி மேற்கொண்டார். இதற்கு உதவுவதாக லாரன்ஸ் தானாக முன் வந்துள்ளார். மேலும், இருவரும் சமாதானமாகி விடுவோம் என நடித்துள்ளார். இதை மகேந்திரன் உண்மை என நம்பியுள்ளார்.
சம்பவத்தன்று தனது வீட்டுக்கு வரும்படி மகேந்திரனை, லாரன்ஸ் அழைத்துள்ளார். அங்கு, இருவரும் மது அருந்தி உள்ளனர். கூடவே லாரன்ஸின் நண்பர் வைத்தியநாதன் என்பவரும் சேர்ந்து மது அருந்தியுள்ளார். அப்போது லாரன்ஸ், வைத்தியநாதன் இருவரும் சேர்த்து மகேந்திரனை தாக்கி, கழுத்தை நெரித்து கொலை செய்து சடலத்தை வீட்டுக்குப் பின்புறம் உள்ள செப்டிக் டேங்கில் போட்டு மூடியுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் வாக்குமூலமாக அளித்ததாக போலீஸார் தெரிவித்தனர். மகேந்திரனின் செல்போனை வைத்தியநாதன் எடுத்துச் சென்று 2 மாதங்களுக்குப் பிறகு தற்போது பயன்படுத்தத் தொடங்கியதால் இந்த கொலைச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மகேந்திரனின் உடல் மீட்கப்பட்டது.