க்ரைம்

விதிமுறைகளை மீறும் பார்கள் மீது கடும் நடவடிக்கை: சென்னை காவல் ஆணையர் எச்சரிக்கை

இ.ராமகிருஷ்ணன்

சென்னை: விதிமுறைகளை மீறும் பார்கள் மற்றும் அதன் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ் எச்சரித்துள்ளார்.

தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகள் மற்றும் பார்களில் பல்வேறு கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், சென்னை நகரில் செயல்பட்டு வரும் பார் உரிமையாளர்கள் மற்றும் மேலாளர்களுடன் சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ் ஆலோசனை நடத்தினார்.

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட பார் உரிமையாளர்கள் மற்றும் மேலாளர்கள் கலந்து கொண்டனர்.

இதில் பார்களின் உரிமம், சட்ட விதிமுறைகள், அனுமதிக்கப்பட்ட நேரம் மற்றும் லஞ்சம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து காவல் ஆணையர் அறிவுரைகளை வழங்கினார்.

ஆலோசனை கூட்டத்துக்குப் பின்னர் பார் உரிமையாளர்கள் மற்றும் மேலாளர்கள் கூறுகையில், ‘எந்தவொரு அதிகாரிக்கும் லஞ்சம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும், உரிமம் உள்ளிட்ட சான்றிதழ்களை பெறுவதற்காக சட்டப்படி நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைத் தவிர வேறு எந்த தொகையையும் செலுத்த வேண்டாம்.

மேலும், காவல் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் யாராவது லஞ்சம் கேட்டால், உடனடியாக புகார் அளிக்கலாம்’ என்றும் காவல் ஆணையர் அறிவுறுத்தியதாக தெரிவித்தனர்.

அரசால் நிர்ணயிக்கப்பட்ட பார் செயல்படும் நேரத்தை மட்டுமே கடைபிடிக்க வேண்டும் என்றும், அனுமதிக்கப்பட்ட நேரத்துக்குப் பிறகு மதுபானம் விற்பனை செய்வது உள்ளிட்ட சட்டவிரோத செயல்களில் ஈடுபடக்கூடாது என்றும் காவல் ஆணையர் அறிவுறுத்தியதாக பார் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

அதேபோல், விதிமுறைகளை மீறி செயல்படும் பார்கள் மற்றும் உரிமையாளர்கள் மீதும், அவர்களிடம் லஞ்சம் பெறும் அதிகாரிகள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் ஆணையர் அமல்ராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

SCROLL FOR NEXT