ராமநாதபுரம்: பரமக்குடியில் பாதுகாப்புப் பணிக்கு வந்த பெண் காவலர்களை கழிப்பறையில் செல்போன் கேமரா மூலம் வீடியோ எடுத்த எஸ்எஸ்ஐயை ராமநாதபுரம் எஸ்பி பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் ஜன.17 அன்று தியாகி இமானுவேல் சேகரன் மணிமண்டபத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இதையொட்டி பல்வேறு மாவட்டங்களில் இருந்து 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
செல்போன் கேமரா: அப்போது பரமக்குடி நகர் காவல்நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் முத்துப்பாண்டி, மணி நகரில் உள்ள புறக்காவல் நிலையச் சோதனைச்சாவடி பணியில் ஈடுபட்டிருந்தார்.
அங்கு பெண் காவலர்களும் பணியில் இருந்தனர். அந்தச் சோதனைச்சாவடி கழிப்பறைக்கு தஞ்சாவூரைச் சேர்ந்த பெண் காவலர் ஒருவர் சென்றபோது, அங்கு செல்போன் கேமரா மூலம் வீடியோ பதிவாகிக் கொண்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து அவர் காவல் துறை உயர் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தார். விசாரணையில், செல்போனை வைத்து வீடியோ எடுத்தது எஸ்எஸ்ஐ முத்துப்பாண்டி எனத் தெரியவந்தது.
பெண் காவலர் புகாரின் பேரில் முத்துப்பாண்டி மீது பரமக்குடி அனைத்து மகளிர் போலீஸார் வழக்குப் பதிந்து நேற்று முன்தினம் அவரை கைது செய்து ராமநாதபுரம் மாவட்ட சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் எஸ்எஸ்ஐ முத்துப்பாண்டியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி.சந்தீஷ் பணியிடை நீக்கம் செய்து நேற்று உத்தரவிட்டார்.