தஞ்சாவூர்: இளைஞர்களை மூளைச்சலவை செய்து, தடை செய்யப்பட்ட இயக்கத்தில் சேர்க்க முயன்றதாக 6 பேரை போலீஸார் நேற்று கைது செய்தனர்.
தடை செய்யப்பட்ட ஹிஸ்ப்-உத்-தஹ்ரிர் மற்றும் கிலாபத் இயக்கத்தில் சேர்ப்பதற்காக தஞ்சாவூரில் ரகசிய வகுப்புகளை நடத்தி, இளைஞர்களை மூளைச் சலவை செய்து வருவதாக தமிழக சிறப்பு புலனாய்வு பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, தஞ்சாவூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அனுமதி பெற்று, காவல் துணை கண்காணிப்பாளர் சார்லஸ் மேற்பார்வையில், ஆய்வாளர்கள் சுகுமார், செந்தில்குமார், விஷ்ணுபிரசாத், ஜெயந்தி, முருகானந்தம் ஆகியோர் அடங்கிய சிறப்பு புலனாய்வு பிரிவு போலீஸார் நடவடிக்கை மேற்கொண்டனர்.
இந்நிலையில் செப்.29-ம் தேதி, தஞ்சாவூர் டவுன்க ரம்பை பகுதியைச் சேர்ந்த யாசர் அப்துல்(25), இவரது சகோதரர் உமர் முக்தர்(29), கீழவாசல் எஸ்என்எம் நகரைச் சேர்ந்த ஜாகீர் உசேன்(50), இவரது சகோதரர் அப்துல்(49), கீழவாசல் ராமசாமிபேட்டையைச் சேர்ந்த சம்சுதீன்(27), கீழவாசல் ரகுமான் நகரைச் சேர்ந்த சேக் பரீத்(38) ஆகியோர் வீடுகளில் சோதனை செய்து, விசாரணை நடத்தினர்.
அப்போது அங்கிருந்து, தடை செய்யப்பட்ட அமைப்பான ஹிஸ்ப்-உத்-தஹ்ரிர் மற்றும் கிலாபத் அமைப்புகளுடன் தொடர்புடைய 20-க்கும் மேற் பட்ட புத்தகங்கள், 5 செல்போன்கள், லேப்டாப், பென்டிரைவ் ஆகியவற்றைக் கைப்பற்றினர்.
இதுதொடர்பாக, தஞ்சாவூர் கிழக்கு காவல் நிலையத்தில், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, யாசர் அப்துல், உமர் முக்தர், ஜாகீர் உசேன், அப்துல், சேக் பரீத், சம்சுதீன் ஆகிய 6 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர்.