திருவள்ளூர்: சென்னை, அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த 11 வயது சிறுவன், கடந்த 2024-ம் ஆண்டு தன் வீட்டருகே உள்ள கடைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, அம்பத்தூர், ஒரகடம் பகுதியைச் சேர்ந்த பிரேம்குமார் (27), சிறுவனை மிரட்டி, கடத்திச் சென்று தனது வீட்டில் பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அறிந்த சிறுவனின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், சென்னை, அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
வழக்கு விசாரணை திருவள்ளூர் மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் புவனேஸ்வரி ஆஜராகி வாதாடினார். முடிவுக்கு வந்த வழக்கு விசாரணையில், பிரேம்குமார் மீதான குற்றம் நிரூபணமாகியது.
இதையடுத்து, நேற்று முன் தினம் மாலை மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்ற உமா மகேஸ்வரி தீர்ப்பு அளித்தார். அதில், பிரேம்குமாருக்கு, சிறுவனை மிரட்டி கடத்திய குற்றத்துக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம், சிறுவனை பாலியல் ரீதியாக துன்புறுத்திய குற்றத்துக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
இந்த தண்டனைகளை பிரேம்குமார் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி, பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க அரசுக்கு பரிந்துரைத்துள்ளார்.