சென்னை: படிக்கட்டில் பயணம் செய்ததை கண்டித்த மாநகர பேருந்து நடத்துநரை பள்ளி மாணவர்கள் சூழ்ந்து கொண்டு தாக்கி உள்ளனர். இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை விசாரணை நடத்தவுள்ளது.
ஐயப்பன்தாங்கல் பகுதியில் இருந்து நேற்று காலை மாநகர பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு ராயபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தது. போரூர் சந்திப்பு அருகே சென்றபோது, பள்ளி மாணவர்கள் சிலர் பேருந்தில் ஏறினர். அப்போது மாணவர்கள் சிலர் பேருந்துக்குள் தகாத வார்த்தைகளால் பேசிக்கொண்டு இருந்ததுடன், சில மாணவர்கள் படிக்கட்டில் நின்றபடி பாட்டுப்பாடி பயணம் செய்தனர்.
இதனை கவனித்த பேருந்து நடத்துநர் பிரகாஷ் (52), மாணவர்களை அமைதியாக இருக்குமாறும், படிக்கட்டில் நின்று பயணம் செய்யாமல் உள்ளே வந்து பாதுகாப்பாக பயணம் செய்யுமாறும் அறிவுறுத்தியுள்ளார்.
இதனால் மாணவர்களுக்கும், நடத்துநருக்கும் இடை யே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பள்ளி மாணவர்கள், நடத்துநர் பிரகாஷை சூழ்ந்து கொண்டு தாக்கினர்.
மாணவர்களை சில பயணிகள் தடுக்க முயன்ற போது, அவர்களையும் மாணவர்கள் தகாத வார்த்தைகளால் திட்டினர். இதையடுத்து பேருந்து ஓட்டுநர் உடனடியாக போரூர் சந்திப்பில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாரிடம் சம்பவம் குறித்து தெரிவித்தார். இதனை தொடர்ந்து வளசரவாக்கம் காவல் நிலையத்தில் மாணவர்கள் ஒப்படைக்கப்பட்டனர்.
இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை செயலர் ஜெ.இன்னசென்ட் திவ்யா வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘‘சென்னை போரூரில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் சிலருக்கும், மாநகரப் பேருந்து நடத்துநருக்கும் மாணவர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் குறித்து விசாரணை செய்து, நடவடிக்கை எடுக்க கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனைகளும் வழங்கப்படும்” என கூறியுள்ளார்.