ஊட்டி: கோடநாடு கொலை, கொள்ளை சம்பவத்தில், சாட்சியான விடுதி உரிமையாளர் சாந்தாவை மிரட்டிய வழக்கில் சயான் மற்றும் வாளையார் மனோஜ் ஆகியோர் விடுவிக்கப்பட்டார்.
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே உள்ள கோடநாடு பகுதியில் மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான எஸ்டேட் பங்களாவில் கடந்த 2017-ம் ஆண்டு கொலை, கொள்ளை சம்பவம் அரங்கேறியது. இந்த கொலை, கொள்ளை சம்பவத்தில் 11 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கின் விசாரணை ஊட்டியில் உள்ள ஒருங்கிணைந்த மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சம்பந்தப்பட்ட ஊட்டியில் உள்ள தனியார் விடுதி உரிமையாளர் சாந்தா என்ற சாட்சியை கேரள மாநிலத்தை சேர்ந்த சயான் மற்றும் வாளையார் மனோஜ் ஆகியோர் மிரட்டியதாக கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 4ம் தேதி ஊட்டி நகர மத்திய காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை கூடுதல் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த வழக்கின் இறுதி தீர்ப்பு இன்று கூடுதல் மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி சோழியா வழங்கினார்.
இன்று நடைபெற்ற இறுதி விசாரணையில் இந்த வழக்கில் அரசு தரப்பில் எவ்வித சாட்சிகளும் உறுதி செய்யப்படாததால் இவ்வழக்கில் இருந்து சயான் மற்றும் வாளையார் மனோஜ் ஆகியோரை விடுதலை செய்து உத்தரவிட்டார்.
இது குறித்து எதிர் தரப்பு வழக்கறிஞர் முனிரத்தினம் செய்தியாளர்களிடம் பேசும்போது, ‘கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள செயல் மற்றும் வாளையார் மனோஜ் ஆகியோரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் தொடுக்கப்பட்ட இந்த வழக்கில் சாந்தா என்ற சாட்சியை மிரட்டியதாகவும், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், ஆனால் நீதிமன்றத்தில் அரசு தரப்பு வழக்கில் ஆதாரங்கள் நிரூபிக்க முடியாததால் இருவரையும் நீதிபதி விடுதலை செய்தார்’ என்றார்.