க்ரைம்

திருவாரூர் மாவட்ட வனச்சரக அலுவலகத்தில் ரூ.48 லட்சம் மோசடி: கணக்காளரிடம் விசாரணை

சி.கோபாலகிருஷ்ணன்

திருவாரூர்: திருவாரூர் மாவட்ட வனச்சரக அலுவலகத்தில் ரூ.48 லட்சம் பண மோசடி நடைபெற்றுள்ளது தொடர்பாக, அங்கு பணியாற்றிய கணக்காளர் மீது மாவட்ட குற்ற தடுப்புப் பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவாரூர் மாவட்ட வனச்சரக அலுவலகத்தில், கணக்காளராக பணியாற்றி வந்தவர் கே.எஸ்.சிவக்குமார். இவர் கடந்த 2017ம் ஆண்டு முதல் திருவாரூர் மாவட்ட வனச்சராக அலுவலகத்தில் கணக்காளராக பணியாற்றி வந்தார்.

இந்த காலகட்டத்தில், திருவாரூர் மாவட்ட வனச்சரக அலுவலகத்தில் இருந்து அரசுக்கு செலுத்த வேண்டிய, தொகைகளை செலுத்தாமல், பணத்தை செலுத்தியதுபோன்று ஆவணங்களை தயார் செய்தும், வங்கி முத்திரைகளை போலியாக தயாரித்தும் அலுவலகக் கோப்பில் அரசுக்கு செலுத்தவேண்டிய பணத்தை செலுத்தியது போன்று கணக்கு காட்டியுள்ளார்.

இதுதொடர்பாக வனச்சராக தணிக்கை குழுவினர் ஆய்வு செய்த போது, கடந்த 2025-ம் ஆண்டில் 39 லட்சத்து 35 ஆயிரத்து 63 ரூபாயும், 2026-ம் ஆண்டில் 8 லட்சத்து 76 ஆயிரத்து 663 ரூபாய் உட்பட மொத்தம் 48 லட்சத்து 12,426 ரூபாய் பணமோசடி செய்துள்ளது தெரியவந்தது.

இது தொடர்பாக அலுவலக கண்காணிப்பாளர் குமரேசன் கொடுத்த புகாரின் பேரில், திருவாரூர் மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

சிவக்குமார் அன்மையில் தேனி மாவட்ட வனச்சரக அலுவலகத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டு பணியாற்றி வந்த நிலையில், முதல் கட்டமாக சிவக்குமாரை வனத்துறை, பணியிடை நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது. தொடர்ந்து திருவாரூர் மாவட்ட குற்ற தடுப்புப் பிரிவு போலீஸார் சிவகுமாரை கைது செய்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT