சென்னை: தமிழக ஊரக வளர்ச்சி, ஊராட்சித் துறை சார்பில் கிராமப்புறங்களில் அடிப்படை சுகாதார வசதிகளை மேம்படுத்துவதற்காக செயல்படுத்தப்படும் 15-வது நிதிக்குழு சுகாதார மானியத் திட்டத்துக்கான நிதி சென்னையில் உள்ள ஹெச்டிஎஃப்சி வங்கியின் ஒருங்கிணைப்புக் கணக்கில் பராமரிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், கடந்த அக்.12 முதல் 30-ம் தேதி வரை நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர், ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம், திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களின் அங்கீகரிக்கப்பட்ட அலுவலர்களின் பயனர் விவரங்களை முறைகேடாகப் பயன்படுத்தி, 46 பரிவர்த்தனைகள் மூலம் ரூ.22.30 கோடியை 25 வங்கிக் கணக்குகளுக்கு மாற்றி சைபர் குற்றவாளிகள் மோசடி செய்துள்ளனர்.
இதுகுறித்த புகாரின்பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் போலீஸார் கடந்த நவ.3-ம் தேதி வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். இதில், மோசடி செய்யப்பட்ட பணம் பல்வேறு வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டு, பின்னர் ரொக்கமாக எடுக்கப்பட்டதுடன், மற்ற வங்கிக் கணக்குகளுக்கும் மாற்றப்பட்டது தெரியவந்தது.
இதுதொடர்பாக சென்னை செல்லப்பாண்டியன், அசோக் மல்லு, நரேஷ் அத்வானி, கரும்பூர் அண்ணாதுரை, பெங்களூரு லோகநாதன், மதுரை அப்துல் ரஹ்மான், ஜெகதீஷ், சிவகங்கை அஷ்ரஃப் அலி, கண்ணதாசன் ஆகிய 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
மோசடிக்காகவே பயன்படுத்தப்படும் ‘மணி மியூல்’ வங்கிக் கணக்குகள் மூலம் பணம் மாற்றப்பட்டதும் தொடர் விசாரணையில் கண்டறியப்பட்டது. அந்த கணக்குகளுடன் தொடர்புடைய நபர்களைக் கண்டறிய வெளி மாநிலங்களில் 3 தனிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், தஞ்சாவூரைச் சேர்ந்த மேலும் 5 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். இதன்மூலம் கைது செய்யப்பட்டோர் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது.