சென்னை: அரசு வேலை பெற்றுத் தருவதாக கூறி ரூ.10 லட்சம் மோசடி செய்ததாக சகோதரர்களான திமுக பிரமுகர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் சுந்தரமூர்த்தி (29). இவர் 2022 ஆண்டு பொறியியல் படிப்பு முடித்துவிட்டு வேலை தேடி வந்துள்ளார்.
அப்போது அவரது தந்தை ராஜேந்திரனுக்கு தெரிந்த நபர் மூலம் சென்னை ஆழ்வார் திருநகரை சேர்ந்த திமுக பிரமுகரான நசீர் அகமத் (35) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.
பின்னர் நசீர் அகமத், ராஜேந்திரனிடம் தனது சகோதரர் பஷீர் அகமத் திமுகவில் முக்கிய பொறுப்பில் உள்ளதாகவும் அவருக்கு கட்சியில் மிகுந்த செல்வாக்கு இருப்பதால் உங்கள் மகனுக்கு அரசு வேலை வாங்கித் தருவதாகவும் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி அரசு வேலை வாங்கித் தர ரூ.10 லட்சம் செலவாகும் எனக் கூறியுள்ளார்.
இதனை நம்பிய ராஜேந்திரன் தன் மகன் சுந்தரமூர்த்திக்காக ரூ.10 லட்சம் கொடுத்ததாக கூறப்படுகிறது. பணம் வாங்கிய பிறகு நசீர் மற்றும் பஷீர் இருவரும் கூறியதுபோல் வேலை வாங்கி கொடுக்கவில்லையாம்.
மேலும் பணத்தையும் திருப்பிக் கொடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக சுந்தரமூர்த்தி சில தினங்களுக்கு முன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
இதுகுறித்து விசாரணை நடத்த மதுரவாயல் போலீஸாருக்கு உத்தரவிடப்பட்டது. அதன்படி போலீஸார் திமுக பிரமுகர் பஷீர் அகமத் மற்றும் அவரது சகோதரர் நசீர் அகமத் இருவர் மீதும் மோசடி உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.