ஷாகுல் அமீது
கேளம்பாக்கம்: கேளம்பாக்கம் அருகே மயானத்தில், ஜாமீனில் வெளியே வந்த பிரபல ரவுடி தலை சிதைக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கம் கே.எஸ்.எஸ். நகர் அருகே உள்ள மயானத்தில் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக கேளம்பாக்கம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. கேளம்பாக்கம் உதவி ஆணையர் ஜான் விக்டர், ஆய்வாளர் தமிழன்பன் உள்ளிட்ட போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர்.
கொலை செய்யப்பட்டவர் கேளம்பாக்கம் ஜோதி நகரைச் சேர்ந்த ஷாகுல் அமீது (27) என்பது தெரியவந்தது. அவர் மீது கொலை, கொள்ளை, கொலை மிரட்டல், செயின் பறிப்பு, கஞ்சா விற்பனை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதும், அவர் ‘கிரேடு-1’ ரவுடிகள் பட்டியலில் இருந்ததும் தெரியவந்தது.
மேலும், கொளத்தூரைச் சேர்ந்த முக்கிய ரவுடியுடன் கூட்டாளியாக இருந்து பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட ஷாகுல் அமீது, பின்னர் அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்ததாகக் கூறப்படுகிறது.
சிறையில் அடைப்பு
தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வழக்கில் சுமார் 10 நாட்களுக்கு முன்பு சிறையில் அடைக்கப்பட்ட அவர், கடந்த வெள்ளிக்கிழமை ஜாமீனில் வெளியே வந்துள்ளார். அவர் சனிக்கிழமை மாலை 6.30 மணியளவில் மயானத்தில் நண்பர்களுடன் அமர்ந்து மது அருந்தியதை அப்பகுதி மக்கள் பார்த்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
கேளம்பாக்கம் போலீஸார் சடலத்தைக் கைப்பற்றி செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவ இடத்தில் இருந்த தடயங்களைச் சேகரித்து விசாரித்து, கொலை தொடர்பாக தையூர், பாரதி நகர் பகுதியைச் சேர்ந்த அருண் (31), தையூர் பாலமா நகர் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் (35), ஏகாட்டூர் கங்கையம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த சூர்யா (32), கேளம்பாக்கம் ஜோதி நகரைச் சேர்ந்த அப்துல் ரகுமான் (25) ஆகிய 4 பேரை நேற்று கைது செய்தனர்.
கொலைக்கான காரணம் குறித்து அவர்களிடம் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை வழக்கில் தொடர்புடைய மற்றொரு குற்றவாளியான அஜய் என்பவரை போலீஸார் தேடி வருகின்றனர்.