எஸ்ஐ அருண்பிரசாத், சுட்டுப் பிடிக்கப்பட்ட ராஜா
திண்டுக்கல்: வத்தலக்குண்டு அருகே எஸ்ஐயை அரிவாளால் வெட்டிவிட்டு தப்ப முயன்ற ரவுடியை போலீஸார் சுட்டுப்பிடித்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி அருகே சிக்கனம்பட்டியைச் சேர்ந்தவர் ராஜா (55). இவர் போலீஸாரின் சரித்திர குற்றப் பதிவேட்டில் இடம்பெற்றுள்ளார். இவர் மீது இரட்டைக் கொலை வழக்கு உள்பட 26 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர், கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று தற்போது பிணையில் வெளியே வந்துள்ளார்.
இந்நிலையில், கொலை வழக்கில் தனக்கு எதிராக சாட்சி சொன்னவர்களை ராஜா மிரட்டுவதாக திண்டுக்கல் நகர் வடக்கு போலீஸாருக்கு புகார் வந்தது. மாவட்ட எஸ்பி எஸ்.ஜெயக்குமார் உத்தரவின்பேரில் எஸ்ஐ அருண்பிரசாத் தலைமையிலான தனிப்படை ரவுடி ராஜாவின் நடமாட்டத்தை கண்காணித்தது.
வத்தலக்குண்டு அருகே என்.கோவில்பட்டியில் அவர் பதுங்கி இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. எஸ்ஐ அருண்பிரசாத் மற்றும் போலீஸார் அங்கு சென்றனர். போலீஸாரைக் கண்டதும் ராஜா அரிவாளைக் காட்டி மிரட்டினார். அவரை பிடிக்க முயன்ற எஸ்ஐ அருண்பிரசாத் கையில் வெட்டி விட்டு தப்பிக்க முயன்றார்.
இதையடுத்து, எஸ்ஐ அருண்பிரசாத், ராஜாவின் காலில் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தார். இதில் காயமடைந்த இருவரும் நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
திண்டுக்கல் மாவட்ட எஸ்பி எஸ்.ஜெயக்குமார், எஸ்ஐயை சந்தித்து நலம் விசாரித்தார். சம்பவம் நடந்த இடத்தில் டிஎஸ்பி இளஞ்செழியன் ஆய்வு செய்தார். இதுகுறித்து எஸ்பி செய்தியாளர்களிடம் கூறுகையில், ராஜாவை பிடிக்க வானத்தை நோக்கி மூன்று முறை துப்பாக்கியால் சுட்டபோதும், அவர் அரிவாளை கீழே போடவில்லை. எஸ்ஐயின் இடது கையில் வெட்டியுள்ளார். இதையடுத்தே அவர் தற்காப்புக்காக காலில் சுட்டுள்ளார் என்றார்.