சென்னை: வாரிசு சான்றிதழ் பெற ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வருவாய் அதிகாரிக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து சென்னை லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணவேணி (60). இவர் கடந்த 2014-ம் ஆண்டு அக்.24-ம் தேதி தண்டையார்பேட்டை தாலுகா அலுவலகத்தில் வாரிசு சான்றிதழ் கோரி விண்ணப்பித்தார். அங்கு பணியில் இருந்த வருவாய் ஆய்வாளரான ஹரிஹரன், வாரிசு சான்றிதழ் வழங்க ரூ.25 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். இதுதொடர்பாக கிருஷ்ணவேணி அளித்த புகாரின்பேரில், லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் கடந்த 2014 நவ.18-ம் தேதி லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளர் ஹரிஹரனை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.
சென்னை லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி வி.ஜெகந்நாதன் முன்பு இந்த வழக்கு விசாரணை நடந்தது. லஞ்ச ஒழிப்பு போலீஸார் தரப்பில் சிறப்பு வழக்கறிஞர் உஷாராணி ஆஜராகி வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றம் சாட்டப்பட்ட வருவாய் ஆய்வாளர் ஹரிஹரனுக்கு 4 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.4 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.