சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ் | கோப்புப் படம்

 
க்ரைம்

சைபர் குற்றங்களை தடுப்பது குறித்து சென்னை காவல் ஆணையருடன் ரிசர்வ் வங்கி அதிகாரிகள் ஆலோசனை

இ.ராமகிருஷ்ணன்

சென்னை: சைபர் குற்றங்களை தடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக சென்னை காவல் ஆணையருடன் ரிசர்வ் வங்கி அதிகாரிகள் சந்தித்து ஆலோசித்தனர்.

சைபர் குற்றவாளிகள் பொதுமக்களின் வங்கிக் கணக்குகளில் உள்ள பணத்தை மோசடியாகப் பறிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. வங்கி அதிகாரிகள் போல் தொலைபேசியில் பேசி ஏமாற்றுதல், போலியான குறுஞ்செய்திகள் மற்றும் இணையதள இணைப்புகளை அனுப்புதல், போலி வங்கி செயலிகளைப் பதிவிறக்கம் செய்யச் செய்தல், ஓடிபி மற்றும் வங்கி ரகசிய விவரங்களைப் பெற்று பணத்தைத் திருடுதல் என பல்வேறு வழிகளில் இணையவழி மோசடிகள் நடைபெறுகின்றன.

இதுபோன்ற குற்றங்களைத் தடுக்க பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், வங்கிகளின் பாதுகாப்பு கட்டமைப்புகளையும் வலுப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், வங்கிகளில் நடைபெறும் இணையவழி பண மோசடிகளைத் தடுப்பது தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ் ரிசர்வ் வங்கியின் மண்டல இயக்குநர் ஜெயகுமார் தலைமையிலான அதிகாரிகள் சந்தித்துப் பேசினர்.

அதில் அரசு மற்றும் தனியார் வங்கிகளில் வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்குகள் மற்றும் தனிப்பட்ட விவரங்களை இணையவழியில் திருடி, அவர்களின் வங்கிக் கணக்குகளில் இருந்து பணத்தை அபகரிக்கும் சம்பவங்களைத் தடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

மேலும், வங்கிக் கணக்குகளை குறிவைத்து இணையக் குற்றவாளிகள் மேற்கொண்டு வரும் பல்வேறு மோசடி உத்திகள், இணையவழி பணப் பரிவர்த்தனைகளில் உள்ள பாதுகாப்புக் குறைபாடுகள், வங்கிக் கணக்குகளின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

இதுபோன்ற மோசடிகளில் பொதுமக்கள் சிக்காமல் இருக்க மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், வங்கி ரகசிய விவரங்கள் மற்றும் ஓடிபி எண்களைப் பாதுகாப்பாக வைத்திருப்பதன் அவசியம், போலியான தொலைபேசி அழைப்புகள் மற்றும் இணையதள இணைப்புகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது.

சென்னை காவல்துறை மற்றும் ரிசர்வ் வங்கி அதிகாரிகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு, வங்கிக் கணக்குகள் மூலம் நடைபெறும் இணையவழி குற்றங்களைத் தடுப்பதற்கும், பொதுமக்கள் மற்றும் நிறுவனங்களின் நிதிப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக கலந்தாய்வு நடைபெற்றது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், ரிசர்வ் வங்கியின் முதன்மை பொது மேலாளர் அனிதா பட்நாயக், பொது மேலாளர் சதீஷ்குமார், துணைப் பொது மேலாளர் கேப்டன் சுதாகர் மற்றும் லெப்டினன்ட் கர்னல் வீரஜ் கருணாகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT