சென்னை: திருமணத்தை மீறிய உறவில் இருந்த பெண் அடித்து கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் உறவினர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை வளசரவாக்கம் அடுத்த ராமாபுரம், செந்தமிழ் நகர் அனெக்ஸ் 2-வது தெருவில் வசித்து வந்தவர் புஷ்பா (37). கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 10 ஆண்டுகளாக அவரை பிரிந்து தனது மகள் மற்றும் உறவினர்களுடன் வசித்து வந்தார்.
நேற்று காலை இவரது மகள் வீட்டின் மொட்டை மாடிக்குச் சென்று பார்த்தபோது, தாய் புஷ்பா முகம், கைகளில் காயங்களுடன் மயங்கிக் கிடந்தார். அதிர்ச்சி அடைந்த அவர், உடனடியாக இதுகுறித்து குடும்பத்தினரிடம் தெரிவித்தார்.
108 ஆம்புலன்ஸ் மருத்துவப் பணியாளர்கள் வந்து பார்த்தபோது புஷ்பா இறந்திருந்தது தெரிந்தது. தகவலறிந்த ராமாபுரம் போலீஸார் சம்பவ இடம் விரைந்து புஷ்பா உடலை மீட்டு பிரேதப்பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில் புஷ்பா அடித்து கொலை செய்யப்பட்டது தெரிந்தது. இதையடுத்து, கொலை வழக்காக பதிவு செய்து உறவினரான கார்த்திக்கை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
கொலை நடந்தது எப்படி?
கொலை செய்யப்பட்ட புஷ்பாவுக்கும், உறவினரான மதுரவாயல் ஸ்ரீதேவிகுப்பத்தைச் சேர்ந்த டெய்லரான கார்த்திக் (34) என்பவருக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இதையடுத்து புஷ்பா வீட்டுக்கு கார்த்திக் அடிக்கடி வந்து சென்றுள்ளார்.
அதன்படி சம்பவத்தன்று இரவும் கார்த்திக் வந்துள்ளார். இருவரும் மொட்டை மாடியில் தனிமையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறியுள்ளது. ஆத்திரம் அடைந்த கார்த்திக், புஷ்பாவை தாக்கிவிட்டு சென்றுள்ளார். இதில் புஷ்பா இறந்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.